தொடர்மழையினால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் கடல் போல காட்சி அளிக்கிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த கனமழை பெய்தது. இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகில் கரையை கடந்ததையடுத்து சென்னையில் மழையின் அளவு குறைந்துள்ளது. இருப்பினும் பிற்பகலில் சுமார் அரைமணி நேரம் அதிகனமழை பெய்தது. பின்பு பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தமுறை சென்னையை பதம் பார்த்து விட்ட கனமழை விழுப்புரம், கடலூர்,கிருஷ்ணகிரி , ராணிப்பேட்டை, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது. மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்தாலும், இந்த மாவட்டங்களில் சற்று அதிகமாக மழை பெய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம்,கோலியனூர், வல்லம், வளவனூர் பகுதிகளில் தலா 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழையினால் அணைகள் நிரம்பியதால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 51 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும், பம்பை ஆறு, துரிஞ்சல் ஆறுகளில் இருந்து வெளியேறும் தண்ணீராலும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திண்டிவனம் அடுத்த வீடூர் அணை அதன் முழு கொள்ளளவான 32 அடியை எட்டியதால் அணையில் இருந்து 32,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வேலூரில் பொன்னை ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக இரண்டு முக்கிய பாலங்கள் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபகுதியில் உள்ள கழிஞ்சூர் ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து இடுப்பளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் இருகரைகளையும் தொட்டபடி ஒரு லட்சம் கன அடி தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, நாராயணபுரம் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால், அங்கிருந்த மக்கள் அனைவரும் வெளியேறி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி கெடிலம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம், பழைய பாலத்தின் மீது 4 அடி உயரத்திற்கு பாய்ந்தோடுகிறது. இதனால் 10 ஆயிரத்திற்கும்மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனால் கடலூர் மாவட்டம் கடல்போன்று காட்சியளிக்கிறது. இரண்டாவது தளம்வரை தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுகு மாற்றப்பட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளப்பெருக்கினால் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. குடியாத்தம், பசுமாத்தூரில் உள்ள வீடு ஒன்று இடிந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. நல்லவேளையாக வீட்டிற்குள் இருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டனர்.
கனமழை காரணமாக தமிழ்நாட்டில் 66,318 பாசன ஏரிகள் நிரம்பின. தமிழ்நாட்டில் பொதுப்பணித் துறையின் பாரமரிப்பில் உள்ள 14,138 பாசன ஏரிகளில் 66,318 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பின. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக தமிழ்நாட்டில் 3,277 பாசன ஏரிகளில் 76% முதல் 99% வரை நீர் நிரம்பியுள்ளன.
**-வினிதா**
�,