ஆழ்துளை கிணற்றிலிருந்து சுர்ஜித்தை மீட்கும் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டும் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுர்ஜித் விழுந்து 4 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால், இன்று வரை மீட்க முடியாத நிலைதான் நீடித்து வருகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டு மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடுக்காட்டுப்பட்டியில் இன்று (அக்டோபர் 28) செய்தியாளர்களை சந்தித்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, “நான் முதல் நாள் வரும்போதே சுர்ஜித்தின் அம்மா, எப்படியாவது குழந்தையை காப்பாற்றிக் கொடுங்கள் என்று தெரிவித்தார். மீட்புப் பணிகள் தாமதமாகக்கூடிய நிலையில், அவரை வீட்டுக்குள் சென்று பார்ப்பதற்கே அச்சமாக உள்ளது. மீட்புப் பணிகளில் பெரிய அளவு முன்னேற்றம் எதுவும் இல்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் நல்ல நோக்கத்துடன் தான் பணிகளை மேற்கொண்டுவருகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
இருப்பினும், ஆரம்பத்தில் இருந்து ஏற்பட்ட தாமதங்கள் குழந்தையின் உயிருக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்ட ஜோதிமணி, “தேசியப் பேரிடர் மேலாண்மை குழு தாமதமாக வந்ததிலிருந்து பல தாமதங்கள் ஏற்பட்டுவருகின்றன. இந்தப் பாறைகளை குடைவது கடினம், எனவே இந்த திட்டத்தை நிறுத்திவிட்டு வேறு திட்டத்தை கையிலெடுக்கலாம், நாம் வீணடிக்கும் ஒவ்வொரு நொடியும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் மன்றாடிப் பார்த்தேன். நாம் ஒரு முயற்சி எடுக்கும்போது அது தோல்வியடைகிறது என்றால் அதற்கு மாற்றாக முன்வைக்க ‘பி’ திட்டம் எதுவும் இங்கு இல்லை. ஒரு முயற்சி தோல்வியானால் அடுத்த திட்டம் தாமதமாக முடிவெடுக்கப்படுகிறது. இந்த கட்டத்திலும் நாம் இயந்திரத்தை வைத்து குடைந்துகொண்டிருப்பது மக்களுக்கு தவறான நம்பிக்கையை அளிக்கும் என நான் அச்சப்படுகிறேன்” என்று கூறினார்.
மேலும், “குழந்தை சிக்கி மூன்று நாட்கள் ஆகிவிட்டது. குழந்தைக்கு அசைவு இருக்கிறதா என்பது இரண்டு நாட்களாகவே தெரியவில்லை. இன்னும் பாறையைக் குடைவோம் என்பது தவறான முடிவு. அதிகாரிகள் முடிவெடுக்கும் கட்டத்தை நாம் தாண்டிவிட்டோம், இனி அரசாங்கம்தான் முடிவெடுக்க வேண்டும். ரிஸ்க் எடுக்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், ரிஸ்க் எடுக்க முடியாது எனத் தெரிவிக்கிறார்கள். குழந்தையை வெளியே கொண்டுவந்து குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும். நிச்சயம் பாறையைக் குடைந்து உள்ளே செல்வது சாத்தியமில்லை என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.” என்று குறிப்பிட்ட ஜோதிமணி,
தற்போது, ஒரு கடினமான முடிவு எடுக்க வேண்டிய சூழலில் உள்ளோம். இங்கு அதிகாரிகள் முடிவெடுப்பதா, அமைச்சர் முடிவெடுப்பதா அல்லது மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பதா என்று தெரியாத சூழல் உள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக முதலமைச்சர் தலையிட்டு ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டும். குழந்தை சுர்ஜித்தை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
�,”