[மழலையர் பள்ளிகளை திறக்க கோரிக்கை!

Published On:

| By admin

தமிழ்நாட்டில் மழலையர் பள்ளிகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு பிரைமரி நர்சரி மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்இ பள்ளிகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த டிசம்பர் மாதம் மத்தியில் இருந்து ஜனவரி 31ஆம் தேதிவரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்குள்ளாக, கொரோனா பரவலும் குறைந்து வருவதையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்புவரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. ஆனால், நர்சரி,மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளி உரிமையாளர்கள் இன்று(பிப்ரவரி 11) தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

பள்ளிகள் திறக்கப்பட்டு 100 சதவிகித மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகைதந்து பொதுத்தேர்வுக்கு ஆர்வமாகத் தயாராகி வருகின்றனர். அதேவேளையில், குழந்தைகளின் படிப்பினைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள நர்சரி, மழலையர் பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கொரோனா காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எல்கேஜி வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் இன்னும் பள்ளிக்கே செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share