சென்னையில் இன்று மாலை தொடங்கும் மழை படிப்படியாக அதிகரித்து நாளை அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையினால் தொடர்மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18 ஆம் தேதி தெற்கு ஆந்திரா, வட தமிழக கடற்கரை நோக்கி நகர்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று(நவம்பர் 17) செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்,”குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்.
நவம்பர் 18 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்பதால் நான்கு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர் ,வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, புதுச்சேரிப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இன்றும் நாளையும் மத்திய, மேற்கு, தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
கடந்த வாரத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போதுதான் சரிசெய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒருசில இடங்களில் மழைநீர் தேங்கியபடிதான் உள்ளது. இந்நிலையில் மீண்டும் சென்னையில் அதீத கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாளைக்கு தான் கனமழை என்றாலும், இன்று மதியம் முதலே சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. ஒருசில இடங்களில் மிதமாகவும், சில இடங்களில் லேசாகவும் மழை பெய்து வருகிறது. ஆலந்தூர், விமான நிலையம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது.
இந்த நிலையில் இன்றைக்கு தக்காளி ரூ.90க்கு விற்கப்படுகிறது, சில இடங்களில் கிலோ 110க்கும் விற்கப்படுகிறது. கேரட்,பீன்ஸ்,கத்திரிக்காய் என எல்லா காய்கறிகளும் விலைஏறிவிட்டது. மழை வருவதற்கு முன்னரே இந்த விலையேற்றம் என்றால், மழை வந்த பிறகு காய்கறிகள் எந்தளவுக்கு உயரும் என்று சென்னைவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
**-வினிதா**
�,