bநாளை மறுநாள் சென்னைக்கு ரெட் அலர்ட்!

Published On:

| By Balaji

குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக நவம்பர் 18ஆம் தேதி, அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்தடுத்து உருவாகிற குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தொடர்மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன், “தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாள்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.இதன் காரணமாக இன்று கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை(நவம்பர் 17) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவம்பர் 18ஆம் தேதி சென்னை,ராணிபேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகின்ற 18ஆம் தேதி சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1 முதல் தற்போது வரை இயல்பாக கிடைக்கும் அளவு 29% ஆனால் தற்போது 44% அளவு மழைப் பொழிவு கிடைத்துள்ளது. இது இயல்பை விட 54% அதிகம். சென்னையில் 49 சதவிகிதத்துக்கு பதிலாக 82 சதவிகிதம் வரை மழைப்பொழிவு கிடைத்துள்ளது. இது இயல்பான அளவை விட 67% அதிகமாகும். ஆனால், இரண்டு மாவட்டங்களில் மட்டும் மழையின் அளவு குறைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 27% மழைப்பொழிவுக்கு பதிலாக 24% மட்டுமே மழைப்பதிவாகி உள்ளது. மதுரையில் 31% பதிலாக 27% மழை மட்டுமே பதிவாகியுள்ளது” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share