ரிலாக்ஸ் டைம்: தினை கீரை சூப்!

Published On:

| By Balaji

.

மீண்டும் லாக்டெளன்கள் தொடங்கிவிட்டன. வீட்டிலிருந்து பணியாற்றும் நிலையும் ஏற்படலாம். மேலும் தற்போதைய குளிர்ச்சியான சூழ்நிலையில் பலருக்கும் உடல் சோர்வு உண்டாகிவிடும். இதைத் தவிர்க்க இழந்த ஆற்றலை மீண்டும் பெற இந்த தினை கீரை சூப் உதவும்.

எப்படிச் செய்வது?

ஒரு டேபிள்ஸ்பூன் தினை, இரண்டு டீஸ்பூன் பாசிப்பருப்பைத் தண்ணீர்விட்டுக் களையவும். பிறகு இவற்றை குக்கரில் சேர்க்கவும். இவற்றுடன் ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளிக் கீரை அல்லது முருங்கைக்கீரை, நறுக்கிய ஒரு தக்காளி, நறுக்கிய பத்து சின்ன வெங்காயம், நான்கு பூண்டு பற்கள், இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள், கால் டீஸ்பூன் சீரகத்தூள், அரை டீஸ்பூன் நல்லெண்ணெய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி பத்து விசில்விட்டு இறக்கவும். பிறகு நீரை வடித்து அதை மட்டும் ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதமிருக்கும் தினை – பருப்பு கலவையை நன்கு கரண்டியால் கடைந்துகொள்ளவும். இப்போது வடித்து எடுத்துவைத்துள்ள நீரைக் கடைந்த கலவையுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். கடைசியாக இந்தக் கலவையை வடிகட்டி, அதில் தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால் கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்தும் அருந்தலாம்.

சிறப்பு

நார்ச்சத்தும் இரும்புச்சத்தும் அதிகம் கொண்ட இந்த சூப் இதய நோய், உடல் பருமன், மூட்டு வலி இருப்பவர்களுக்கும் நல்ல பலனைத் தரும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share