இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயருவதற்கான காரணம் குறித்து எய்ம்ஸ் தலைவர் விளக்கமளித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும்கூட, ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பது கவலை அளிக்கும் அம்சமாக அமைந்துள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 112 நாட்களில் இதுவே அதிகபட்ச ஒரு நாள் கொரோனா பாதிப்பு என்று மத்திய சுகாதார அமைச்சகம் சொல்கிறது.
தமிழகத்தில் மூன்றாவது நாளாக நேற்று (மார்ச் 21) கொரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் மேல் பதிவாகியுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மார்ச் 21 ஒரே நாளில் 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சத்தில் செல்லும் நிலையில், ஆங்கில தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா, மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றாததும் புதிய வகை கொரோனாவுமே தொற்று பரவல் அதிகரித்து இருப்பதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தடுப்பூசி வந்துவிட்டதால் பெருந்தொற்று முடிந்துவிட்டதாக மக்கள் நினைக்கின்றனர். இதன் காரணமாக மக்கள் மாஸ்க் அணிவதை பெரும்பாலும் கைவிட்டு விட்டனர். மாஸ்க் இல்லாமல் பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதை நாம் காண்கிறோம்.
இதுபோன்ற கூட்டமான இடங்கள்தான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவும் இடமாக இருக்கிறது. இன்னொரு விஷயம் என்னவெனில், பரிசோதனை செய்தல், தடம் கண்டறிதல், தனிமைப்படுத்துதல் என்ற அடிப்படை கொள்கையைத் தீவிரமாக பின்பற்றவில்லை. மற்றோர் அம்சம் என்னவென்றால், வைரஸும் உருமாறிக்கொண்டுள்ளது.
சில புதிய வகை வைரஸ்கள் அதிக அளவில் தொற்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாஸ்க் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் தொற்று பரவல் இன்னும் அதிகரிக்கும். கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றுதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் மூலமே கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்த முடியும்” என்று பேசியுள்ளார்.
**-ராஜ்**
.�,