ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

Published On:

| By Balaji

Facebook, Inc. என இருந்த ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை மாற்றப் போகிறார் மார்க் சக்கர்பெர்க். காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.

மக்களை இணைக்கும் சமூக வலைதளமாக ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் இன்று உலகின் மிக முக்கிய டெக் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஆக்குலஸ் போன்ற நிறுவனங்களைக் கைப்பற்றி பெரும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஆனால் ஒவ்வொரு வருடமும் ஃபேஸ்புக் மீதான சர்ச்சைகளும் அதிகரித்து கொண்டேதான் இருக்கின்றன. இதில் பெரும்பாலானவை சமூக வலைதள சேவைகளால் வரும் பஞ்சாயத்துகள்தான்.

இந்த நிலையில்தான் ஃபேஸ்புக் அதன் தாய் நிறுவனத்தின் பெயரை மாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்னதான் டெக் உலகில் பல முன்னெடுப்புகளைத் தொடர்ந்து எடுத்துவந்தாலும் ஃபேஸ்புக் இன்றும் சமூக வலைதளமாகவே பெரும்பாலானோரால் அறியப்படுகிறது. ஆனால், மார்க் சக்கர்பெர்க்கோ விர்ச்சுவல் ரியாலிட்டி, செயற்கை நுண்ணறிவு எனப் பல திசைகளிலும் ஃபேஸ்புக்கின் வீச்சை அதிகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் கூட ‘மெட்டாவெர்ஸ்’ என்ற ஒரு புது தளத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று தீவிரமாகவே செயல்பட்டு வருகிறார் மார்க்.

இந்த முயற்சிகளுக்கு இடையூறாக சமூக வலைதளமாக ஃபேஸ்புக் சிக்கும் சர்ச்சைகள் காரணமாகி விடக் கூடாது என்ற காரணத்துக்காகவே இந்தப் பெயர் மாற்ற முடிவை மார்க் எடுத்திருப்பதாக டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் இன்கார்ப்பரேட்டட்டுக்கு (Facebook Inc.) தனி லோகோ கொடுத்து அனைத்து சேவைகளிலும் காண்பித்தாலும் அது பெரிதாக யார் மனதிலும் பதிவாகவில்லை என்பதே நிஜம்.

வரும் அக்டோபர் 28ஆம் தேதி நடக்கவிருக்கும் ஃபேஸ்புக் வருடாந்திர இணைப்பு மாநாட்டில் இந்தப் பெயர் மாற்றம் மற்றும் அது குறித்த தகவல்களை மார்க் வெளியிடலாம் எனக் கூறப்பட்டிருக்கும் நிலையில் புதிய பெயர் என்ன என்பது ஒரு வாரம் முன்னதாகவே தெரிவிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.

இப்படி டெக் நிறுவனங்கள் அவற்றின் தாய் நிறுவனத்தின் பெயர்களை மாற்றுவது முதன்முறை அல்ல. இதற்கு முன்னர் கூகுள் மற்றும் ஸ்னாப்சாட் இதே போல தங்களின் தாய் நிறுவனங்களின் பெயரை மாற்றியிருக்கின்றன. 2015இல் தனது தாய் நிறுவனத்தின் பெயரை ‘ஆல்ஃபபெட்’ என மாற்றியது கூகுள். அதன் மூலம் ‘கூகுள்’ இனி சர்ச் என்ஜின் மட்டுமல்ல எனச் சொல்லாமல் சொல்லியது. அதேபோல் 2016இல் ஸ்னாப்சாட்டின் தாய் நிறுவனத்தின் பெயரை ஸ்னாப் இன்கார்ப்பரேட்டட் என மாற்றியது ஸ்னாப்சாட். அதே ஆண்டு ஸ்மார்ட்கிளாஸ் ஒன்றையும் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம்.

ஃபேஸ்புக்கின் குடையின் கீழ் பல நிறுவனங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. இன்னும் பல நிறுவனங்கள் அதன் கீழ் வரவிருக்கின்றன. அப்படி இருக்கும்போது அது ஃபேஸ்புக்காக, சமூக வலைதள நிறுவனத்தின் ஒரு பகுதியாக மட்டுமே அறியப்படுவதை மார்க் விரும்பவில்லை என்பது கூடுதல் தகவல்.

**-ராஜ்**

.

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share