{டெல்டா  வேளாண் மண்டலம்: மத்திய அமைச்சர் பதில்!

Published On:

| By Balaji

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். இதை மத்திய அரசுதான் அறிவிக்க முடியும், தமிழக அரசுக்கு அதிகாரமே இல்லை என்று திமுக இதுகுறித்து விமர்சனங்கள் வைத்து வந்த நிலையில், திமுக மக்களவை குழுத் துணைத் தலைவர் கனிமொழியின் இதுபற்றிய கேள்விக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்துள்ளார்.

இன்று (மார்ச் 13) மக்களவையில் பேசிய கனிமொழி ,  “தமிழகத்தின் நெற்களஞ்சியமான  காவேரி டெல்டா பகுதியில் எத்தனை ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தற்போது இயக்கத்தில் இருக்கின்றன. அவற்றில் எத்தனை  ஹைட்ரோ கார்பன்கள் கைவிடப்பட்டு மூடப்பட்டிருக்கின்றன. மூடப்பட்டவை தங்களின் பழைய நிலைமைக்கு  மாறிவிட்டனவா?” என்று  கேட்டார்.

இதற்கு பதிலளித்த மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,  “இது தொடர்பாக தமிழகத்தின் எம்பி.க்கள் என்னை சந்தித்தார்கள். அவர்களிடம் நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன். அதை இங்கேயும் மீண்டும் கூறுகிறேன், ‘நாங்கள் அதாவது மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதிகளை அளிப்பதில்லை. நாங்கள் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு கொடுத்துவிட்டோம். இதை நீங்கள் வரவேற்க வேண்டும். திட்டங்களில் தாமதம் ஏற்படக் கூடாது என்பதற்காக சுற்றுச் சூழல் அனுமதி கொடுக்கும் அதிகாரத்தை மாநில சுற்றுச் சூழல் பாதிப்பு நிர்ணய கமிட்டியிடம் வழங்கிவிட்டோம். திட்டங்களின் தன்மை எங்களை விட மாநில கமிட்டிகளுக்கு ஆழமாக தெரியும் என்பதால் இந்த முடிவெடுத்திருக்கிறோம். தமிழக முதல்வர் கூட என்னை சந்தித்தார். தமிழக அமைச்சர்கள் என்னைச் சந்தித்தனர். நான்  இதுபற்றி முடிவெடுக்கும் பொறுப்பை அவர்களிடமே கொடுத்துவிட்டேன். அவர்கள் எல்லாம் திருப்தி அடைந்திருக்கிறார்கள்” என்றார் அமைச்சர். உடனே  கனிமொழி எம்பி குறுக்கிட்டு,

 “தமிழக முதல்வர் அண்மையில் காவேரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கிறார். இந்நிலையில் இனி டெல்டாவில் ஏதும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்று மத்திய அமைச்சர் உறுதியளிப்பாரா?” என்று கனிமொழி எம்பி கேட்க,

 “இதுமுழுக்கம் முழுக்க மாநில சுற்றுச் சூழல் பாதிப்பு நிர்ணய கமிட்டியுடையது. இந்த விவகாரம் மத்திய அரசுக்கு வரவே வராது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று  கூறினார் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர்.

**வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share