மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளைக் கையாள்வது மற்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் 4 மாநில அரசுகளுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடல்கள் மனிதநேயமற்று, குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் குப்பைகளில் தூக்கி வீசப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு, மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை நடத்தும் விதமும் மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மத்தியப் பிரதேச மாநில, தனியார் மருத்துவமனை ஒன்றில், சிகிச்சை கட்டணம் செலுத்தாததால் முதியவர் ஒருவரைப் படுக்கையோடு கட்டி வைத்தது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், முன்னாள் சட்டத் துறை அமைச்சர் அஷ்வினி குமார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நடத்தப்படும் விதம் குறித்தும், உரிய மரியாதையுடன் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது. நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.கே.கவுல், எம்ஆர் ஷா அமர்வில் இந்த வழக்கு இன்று (ஜூன் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி அரசுக்கு பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் காட்டமாக எழுப்பினர். மும்பையில் 16,000 – 17,000 எண்ணிக்கையிலான சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் டெல்லியில் குறைவாக 7000 சோதனைகள் மட்டும் நடத்தப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
நீதிபதி அசோக் பூஷன் கூறுகையில், பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் உடல்கள் குப்பையில் வீசப்படுகிறது என்றும், மிருகங்களைக் காட்டிலும் நோயாளிகள் மோசமாக நடத்தப்படுவதாக வேதனைத் தெரிவித்தார். டெல்லியின் நிலைமையைச் சொல்லவே மோசமாக இருக்கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் இறந்தவர்களைக் கையாளும் விதம் கவலையடைய செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை, அகமதாபாத், டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளில் சோதனை அதிகரிப்பது அவசியமானது. தற்போது ஒரு நாளுக்கு 10 ஆயிரம் பேருக்குத் தொற்று உறுதி செய்யப்படுகிறது. அவ்வாறான நிலையில், பரிசோதனையை எப்படிக் குறைக்க முடியும், பரிசோதனையை குறைப்பது தீர்வல்ல. டெல்லி, மும்பை, சென்னை மற்றும் அகமதாபாத்தில் கோவிட் -19 வழக்குகள் தினமும் அதிகரித்து வருகின்றன. சோதனைகளை அதிகரிப்பது மாநிலத்தின் கடமை. அப்போது தான் மக்களின் நிலை குறித்துத் தெரியவரும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனாவால் ஒருவர் இறந்துவிட்டால், இறப்பு குறித்து அவரின் குடும்பத்தினருக்குக் கூட தகவல் சொல்வதில்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடைபாதையிலும், காத்திருக்கும் அறையிலும் உடல்கள் வைக்கப்படுகின்றன. படுக்கைகள் காலியாக இருந்தும் பாதிக்கப்பட்டவர்களைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
மேலும், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் எந்த அளவுக்கு இருக்கிறது. போதுமான மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் இருக்கிறார்களா, மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவுக்கு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இதுகுறித்து அந்தந்த மாநில தலைமைச் செயலாளர் அல்லது சுகாதாரத் துறை செயலாளர் கையெழுத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதோடு வழக்கை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
**-கவிபிரியா**�,