சென்னை பல்கலைக்கழகத்துக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் மாணவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் இரவிலும் தொடர்ந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த ஞாயிறு அன்று போராடிய ஜாமியா மற்றும் அலிகார் பல்கலை மாணவர்கள்மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போதும் போராட்டக்காரர்கள்மீது போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். கல்வீச்சு தாக்குதல் மற்றும் தடியடியும் நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசாரின் இருசக்கர வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதனால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் நேற்று முதல் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்திகேயன், சுப்பையா ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவர்களின் போராட்டம் வலுவடைந்த நிலையில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி வரை பல்கலைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதுபோன்று விடுதிக்கு 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். எனினும் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டதால் இரவு 7 மணி முதல் பல்கலையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், பாட்டுப் பாடியும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டவில்லை. கைது செய்தாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரையில் சிறையில் போராட்டத்தைத் தொடருவோம் என தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். அப்போது கைது செய்யப்பட்ட இரு மாணவர்களையும் விடுவிக்க வலியுறுத்தினர்.
**உச்ச நீதிமன்றம் உத்தரவு**
டெல்லி ஜாமியா வன்முறை தொடர்பாக நீதி விசாரணைக் கேட்டு வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தொடர்ந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, ”வன்முறை நடத்தப்பட்டது குறித்து அந்தந்த மாநிலத்துக்கும் தனித்தனியாகக் குழுக்களை அமைத்து உண்மையைக் கண்டறிய வேண்டும். எனவே மனுதாரர்கள் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களை அணுகலாம்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிப்பார்கள். தேவையெனில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைப்பார்கள். உயர் நீதிமன்றங்கள் அனைத்து விதமான அம்சங்களையும் கருத்தில் கொண்டு இரு தரப்பையும் விசாரிக்கும்.
எனவே உச்ச நீதிமன்றம் இவ்விவகாரம் குறித்துத் தனிக் குழுவை அமைக்காது” என்று தெரிவித்துள்ளது.�,