பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டட அனுமதி பெறுவது தொடர்பாக பொதுமக்கள் புகார்களைத் தெரிவிப்பதற்கு தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து நேற்று (ஆகஸ்ட் 28) சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டட அனுமதி பெற, கட்டட உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் [Standing Operating Procedure](www.chennaicorporation.gov.in) என்ற மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5,000 முதல் 10,000 சதுர அடிக்குள் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்களுக்கு தலைமைப் பொறியாளரால் (நகரமைப்பு) அனுமதி அளிக்கப்படுகிறது. 10,000 சதுர அடிக்கு மேல் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் திட்ட அனுமதி அளிக்கப்பட்டு, கட்டட அனுமதி பெறுவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அனுப்பப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பெறப்பட்ட கட்டட அனுமதிக்கான விண்ணப்பத்தின் மீது அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய கட்டணம் செலுத்துவதற்கான கேட்பு ரசீது அளிக்கப்படுகிறது. மேற்படி கேட்பு ரசீதினை விண்ணப்பதாரர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணத் தொகையை இணையதளத்தில் அல்லது கேட்பு வரைவோலை முறையில் செலுத்தியதும் இணையதளத்தில் கட்டட அனுமதி அளிக்கப்படுகிறது.
முறையாக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் இணையதளம் வழியாக வெளிப்படைத் தன்மையுடன் கட்டட அனுமதி அளிக்கப்படுகிறது. மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள பகுதிகளில் 5,000 சதுர அடி மற்றும் அதற்கு கீழ் உள்ள கட்டடங்களுக்கு இணையதளம் வழியாக பெறப்பட்ட விண்ணப்பங்களின் பேரில் 30 நாட்களில் சம்பந்தப்பட்ட மண்டல செயற்பொறியாளரால் கட்டட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், நிலுவையிலுள்ள மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஒரு மாதத்தில் தகுந்த ஆவணங்களுடன் சென்னை மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் இணையதளம் வழியாக உரிய வழிகாட்டுதலின்படி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களையும் உடனடியாக பரிசீலினை செய்து கட்டட அனுமதி வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
மேலும், பொதுமக்கள் இதுகுறித்து புகார் தெரிவிக்க விரும்பினால், மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணிலும், 94451 90748 என்ற விழிப்பு அலுவலரின் வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**பிளாஸ்டிக் பொருட்கள்**
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடைகளில் இருக்கும் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை பத்து நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என்று ஆணையர் உத்தரவிட்டார். பிளாஸ்டிக் தடை மீது கொரோனா காரணமாக கவனம் செலுத்தாமல் இருந்தது. தற்போது இதில் கவனம் செலுத்தி துரிதமாகச் செயல்பட உள்ளோம். மேலும், கொரோனா காலம் என்பதால் கடந்த காலங்களில் வரி பாக்கியை செலுத்த பொதுமக்களை வற்புறுத்தவில்லை. தற்போது பொதுமக்கள் தாமாக முன்வந்து சொத்து மற்றும் தொழில் வரிகளை செலுத்த வேண்டும் என்று ஆணையர் கூறினார்.
**-வினிதா**
�,