கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிறழ்வு, ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் மூலம், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று (ஜூலை 11) கூறியுள்ளார்.
எஸ்பிஐ வங்கியின் ஏழாவது பொருளாதார மாநாட்டில் காணொலி வழியாக சிறப்புரையாற்றிய ரிசர்வ் வங்கி ஆளுநர், “ கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை கொரோனா ஊரடங்கு ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொற்றுநோயும் ஊரடங்கும் நமது பொருளாதார மற்றும் நிதி அமைப்பின் வலுவான தன்மையை சோதிப்பதாகவும் இருக்கிறது. பேரழிவுகள், துன்பங்கள், உயிருக்கு ஆபத்து மற்றும் மக்களின் வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றோடு பொருளாதார நடவடிக்கைகளில் ஒரு சுழற்சியின் மாற்றத்தைத் தூண்டுவதாக இருக்கிறது.
எவ்வாறாயினும், விநியோகச் சங்கிலிகள் எப்போது முழுமையாக மீட்டமைக்கப்படும் என்பது இன்னும் நிச்சயமற்றது. நம்பிக்கையை மீட்டெடுப்பது, நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், வளர்ச்சியை புதுப்பித்தல் ஆகியவை இப்போதைய காலத்தின் தேவை. கோவிட் நெருக்கடி முடிந்தபின், மிகவும் கவனமாக ஒரு பாதை பின்பற்றப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார் சக்தி கந்த தாஸ்.
மேலும் அவர், “ஊரடங்குக் கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் இந்திய பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. நமது நிதி அமைப்பைப் பாதுகாக்கவும், தற்போதைய நெருக்கடியில் பொருளாதார மேம்பாட்டை ஆதரிக்கவும் ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்று அவர் கூறினார்.
**-வேந்தன்**
�,”