]பச்சை தேயிலை கொள்முதல் அதிகரிப்பு

Published On:

| By Balaji

கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை கொள்முதல் அதிகரித்து உள்ளதாக இன்கோசர்வ் (The Tamilnadu Small Tea Growers’ Industrial Cooperative Tea Factories’ Federation – INDCOSERVE) தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. முப்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து, அதற்கான விலையைப் பெற்று வருகிறார்கள்.

நீலகிரியில் இன்கோசர்வ் கட்டுப்பாட்டின் கீழ் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் அக்டோபர் மாதம் பச்சை தேயிலை அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ, “கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கடந்த மாதம் 55 லட்சத்து 80,000 கிலோ பச்சை தேயிலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்துக்கு தேயிலை வாரியம் பச்சை தேயிலை கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.14.74 நிர்ணயித்தது. கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கான மாத விலையை நிர்ணயிக்க அனைத்து தொழிற்சாலைகளின் நிர்வாக குழுவின் பரிந்துரைகள் மற்றும் நிதி நிலைமையை ஆராய்ந்து பரிசீலனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மாதத்துக்கு பச்சை தேயிலை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மஞ்சூர், கைகாட்டி ஆகிய இரண்டு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினர்களுக்கு கிலோவுக்கு ரூ.15 வழங்கப்படும். கடந்த சில மாதங்களாக தேயிலைத் தொழில் வியாபாரத்தில் கடும் விலை சரிவு ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் பொருளாதார மேம்பாட்டிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிறு தேயிலை விவசாயிகள் தொழிற்சாலைகளுக்கு அதிகளவில் பச்சை தேயிலை வழங்கி வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

தற்போது நீலகிரியில் தொடர் மழை பெய்து வருவதால் தேயிலைத் தோட்டங்களில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், வால்பாறையில் தேயிலை செடிகளில் தேயிலை கொசு தாக்குதல் அதிகரித்து உள்ளது. இந்த வகையான கொசுக்கள் கொழுந்து இலையில் அமர்ந்து அதன் சாற்றை உறிஞ்சுவதால், இலைகள் கருகி விழுந்து விடுகின்றன. இவ்வகை கொசுக்களால் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் தேயிலை தோட்ட நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அத்துடன் இந்த வகையான கொசுக்களை கட்டுப்படுத்த தேயிலை செடிகளில் மருந்து தெளிக்கும் பணியும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share