fநியாய விலை கடைகள் மாலை வரை செயல்படும்!

Published On:

| By Balaji

இன்று முதல் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், காய்கறி,மளிகை மற்றும் இறைச்சி கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஊரடங்கின்போது மதியம் வரை மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்த நியாயவிலை கடைகள் தற்போது மாலை 5 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ ஜூன் 8ஆம் தேதி முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாயவிலைக் கடைகள் செயல்படும். மறுஉத்தரவு வரும்வரை இந்த வேலை நேரம் நடைமுறையில் இருக்கும்.

கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணைத் தொகை ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினை 15ஆம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல ஏதுவாக டோக்கன்கள் விநியோகத்தினை ஜூன் 11ஆம் தேதி முதல் 14 ஆம் தேதிக்குள் பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.

ஜூன்11-14 வரை முற்பகல் நேரத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வழக்கம்போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று, கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் இருந்தபோது வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களும் செயல்படாமல் இருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து குறிப்பாக சென்னையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் அளவுக்கு வாகனங்கள் சாலைகளில் செல்கின்றன.

இதனால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னையில் இன்று முதல் அனைத்து சிக்னல்களும் செயல்படும் என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share