sஊரடங்கிலும் ரேஷன் கடைகள் திறந்திருக்கும்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், இன்று முதல் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று முதல் தமிழகத்தில் தளர்வுகளற்ற ஒரு வார ஊரடங்கு அமலுக்கு வந்தது. காய்கறி, மளிகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

கொரோனா நிவாரண நிதியாக மக்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தற்போது முதல் தவணையாக தலா ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வருகிற ஜூன் 3ஆம் தேதிக்குள் கொரோனா நிவாரணத்தின் இரண்டாம் தவணையாக ரூ.2,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனால், ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகள் திறந்திருக்குமா, இல்லையா என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது. மேலும், இதுகுறித்து விரைவில் முடிவு தெரிவிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக அரசு அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இன்று (மே 25) முதல் மே 31ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும். இந்த முடிவு பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டதாகவும், ரேஷன் கடைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஏடிஎம் தொடர்பான வங்கி சேவை மற்றும் வங்கிகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படலாம் என அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது, இன்சூரன்ஸ் நிறுவனங்களும் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel