திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மாடகுடி ஊராட்சியைச் சேர்ந்த பள்ளிவிடை எழில் நகரில் ரேஷன் அரிசியைக் கடத்தி வந்து அதை மாவாக அரைத்து வெளி சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் படி மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல் முருகன், மண்ணச்சநல்லூர் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த மில்லுக்குச் சென்றனர்.
தொடர்ந்து அங்கு மில்லின் பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு ரேஷன் அரிசி மற்றும் கோதுமை ஆகியவை மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், அரவை இயந்திரத்தில் அரைத்த கோதுமை மற்றும் அரிசி மாவு தனியாக மூட்டையில் இருந்ததும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தாசில்தார் சக்திவேல் முருகன் மற்றும் அதிகாரிகள் அந்த மாவு மில்லுக்கு சீல் வைத்தனர்.
அதிகாரிகள் வருவதை அறிந்த மில்லின் உரிமையாளர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் இது பற்றி தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மாவு மில்லில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டை மூட்டையாக கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதற்கு உடந்தையாக இருந்தார்கள் யார்,
எப்படி இந்த கிடங்குக்கு இவ்வளவு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன என்பது பற்றி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை கடத்தி ரகசியமாக மாவாக அரைத்து விற்பனை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
**-ராஜ்**
.