கொரோனா விழிப்புணர்வு தூதுவராக கல்லூரி மாணவிகள் நியமனம்!

Published On:

| By Balaji

சென்னை ராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 5,500 மாணவிகள் கொரோனா விழிப்புணர்வு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராணிமேரி கல்லூரியில் இன்று(டிசம்பர் 15) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதனுடன் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தெருகூத்து மூலம் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ராணி மேரி கல்லூரி மாணவிகளின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளின் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்குபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தக் கல்லூரியில் மொத்தம் 5,500 மாணவிகள் படித்து வருகின்றனர். 4600 மாணவிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 900 மாணவிகள் மட்டுமே தடுப்பூசி செலுத்தவில்லை. அவர்களும் இந்தத் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு ஆர்வமாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். கல்லூரிகளில் படிக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திய முதல் கல்லூரி என்ற நிலையை ராணிமேரி கல்லூரி ஓரிரு நாட்களில் அடைந்துவிடும். இதற்காக கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கல்லூரி மாணவிகளின் ஆர்வத்தைப் பாராட்டும் வகையிலும், அவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் தடுப்பூசி போட்டுக் கொண்ட 5,500 மாணவிகளை கொரோனா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி கேட்டுக் கொண்டோம். அவர்களும் ஆர்வத்துடன் சம்மதம் தெரிவித்துள்ளனர். கொரோனா விழிப்புணர்வு தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு சுகாதாரத் துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த மாணவிகள் தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் உறவினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்வார்கள்” என்று கூறினார்.

ஒமிக்ரான் குறித்து பேசிய அவர்,” மாறுபாடு அடைந்த ஒமிக்ரான் தொற்று மற்ற வைரஸ்களை விட வேகமாக பரவக் கூடியது என்றும், இந்த வகை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிவதும், தடுப்பூசியின் இரண்டு தவணையும் செலுத்துவதுமே நிரந்தரத் தீர்வு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 7 பேர் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை சீரான நிலையில் உள்ளது. அவர்களின் மரபணு பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம்.

பூஸ்டர் தடுப்பூசி மற்றும் 18 வயதிற்குக் கீழ் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஒன்றிய அரசின் முடிவினைப் பொறுத்து முறையான வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share