அயோத்தி வழக்கில் 2019 நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்குத் தரப்படுகிறது. அந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டலாம் என்று தீர்ப்பு வழங்கியது. பாபர் மசூதி கட்டுவதற்கு அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் நிலத்தைச் சன்னி வஃக்ப் வாரியத்துக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
பல ஆண்டுக்கால பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைத்த நிலையில், கொரோனாவுக்கு மத்தியிலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காவிரி, கொள்ளிடம் உட்பட நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளிலிருந்து மண், புனித நீர் ஆகியவை அயோத்திக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கி, அதன்மூலம் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதிவரை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறவுள்ளன. ஆகஸ்ட் 5ஆம் தேதி கோயில் கட்டுவதற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.
இந்த நிலையில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ராமர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற வாராந்திர சத்சங்கத்தில், ஆக்ராவிலிருந்து ஹர்ஷ் என்பவர்,
**ராம ஜென்ம பூமி பிரச்சினை சரியாவதற்கு 30 ஆண்டுக்காலம் எடுத்திருக்கிறது. இப்போது ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கவிருக்கும் நிலையில், நிறைய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. ராமர் ஒரு ராஜாவாக இருந்தபோதும், இன்று வரையிலும் எதனால் அவர் வழிப்பாட்டுக்கு உரியவராக இருக்கிறார். ராமர் இன்றைய காலகட்டத்தில் எப்படி மகத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார் என்று புரிந்துகொள்ள விரும்புகிறேன்** என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த சத்குரு, “அவர் ஆக்ராவிலிருந்து வந்ததால் ராம் என்று சொல்கிறார். நாங்கள் ராமா என்று அழைப்போம். யாராவது நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்று மறந்துவிட்டால் என்ன செய்வது? என்னுடைய பெயரையும் தாடியையும் வைத்து நான் பஞ்சாப் ஆளாக இருப்பேன் என்று சிலர் நினைத்துக்கொள்கிறார்கள். இல்லை… இல்லை… நாங்கள் ராமா என்றுதான் அழைப்போம். தமிழ்நாடு வரைக்கும் சென்று ராமன் என்று சொல்ல மாட்டேன். அப்படி சொன்னால், மக்கள் வேறு ஒருவர் பற்றிப் பேசுகிறேன் என்று குழம்பி, தவறாகப் புரிந்துகொள்வார்கள். இதுதான் இந்த கலாச்சாரத்தின் அழகு.
**குணத்தை வணங்குகிறோம், மனிதர்களை இல்லை**
**ஒரே கடவுள் என்று இங்கு யாரும் இல்லை. குறிப்பிட்ட சில குணங்களை நாம் தெய்வீகம் என்று அங்கீகரிக்கிறோம். சில மனிதர்களிடத்தில், ஏதோ ஒரு மனிதர் அந்த குணத்தை வெளிக்காட்டும்போது நாம் அவரை வணங்குவோம். அந்த தன்மையைத்தான் வணங்குகிறோம். மனிதர்களை வணங்கவில்லை. உலகத்தில் பெரும்பகுதியினர் இதைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் மனம் இதுபோல் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. எது கடவுள், எது சாத்தான், எது ஆண், எது பெண் என்று தெளிவாக வரையறுக்கப்பட்ட கோட்பாடுகள் இருக்கிறது.
இந்தியாவில் எதுவுமே வரையறுக்கப்பட்டது இல்லை. ஏனென்றால் நான் சொன்னது போல், எல்லாமே ஒரு கதம்பமாக இருக்கிறது. எப்போதும் உருமாற்ற நிலையில் இருக்கிறது. எப்பவும் நகர்ந்துகொண்டிருக்கிறது. இதற்கு அதிக உயிரும், சக்தியும் செலவாகிறது. முறையில்லாமல் தொடர்ந்து ஒரு திசை நோக்கிப் போவதற்கு அதிக சக்தியைச் செலவு செய்ய வேண்டும்.
இது ஒரு பறவை அல்லது தேனீ கூட்டம் மாதிரி, எங்கேயும் போகாமல் சுற்றித் திரிவது போல் தெரியும். ஆனால் எப்பவுமே ஒரு திசை நோக்கித்தான் போவார்கள். எங்கே போகிறார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். வெளியிலிருந்து பார்த்தால், எங்கே போகிறார்கள் என்று தெரியாமல் சுற்றுவது போல தெரியும்.
எனவே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ராம் அல்லது ராமா என்றால், இவர் அயோத்தியிலிருந்து வந்தவர். ஏனென்றால் அவர் பிறந்த இடம். இந்தக் கோயில் மிகவும் பழமையானது. எத்தனை காலத்துக்கு முன்னதாக முதல் கோயில் வந்தது என்று யாருக்கும் தெரியாது. அதன் பின்னர் இதில் சீர்திருத்தங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்தது. 500 ஆண்டுகளுக்கு முன்பு இது அழிக்கப்பட்டது. பல கோயில்கள் அழிக்கப்பட்டன. அதற்கு மேல், வேறு மதங்களுடைய அமைப்புகள் அதே கட்டட பொருட்களை வைத்து உருவாக்கப்பட்டது. ஒரு கட்டடத்தை இடித்து, அதை வைத்து வேறு கட்டடத்தை உருவாக்கினார்கள்.
**இதனால் ராமா கடவுள் அல்ல. வழிப்பாட்டுக்குரிய ஒரு சின்னமாக இருக்கிறார். அவரை நாம் கடவுள் என்று அழைக்கவில்லை. மரியாதை புருஷர் என்று அழைத்தோம். புருஷோத்தம் என்றால் உயர்ந்த மனிதர். ராமரை எப்போதும் புருஷோத்தமா என்று அழைக்கிறோம். ஏனென்றால் மனிதர்களில் உயர்ந்தவர் என்று சொல்கிறோம். ஏனென்றால் அவ்வளவு உயர்ந்திருந்தார்.**
அவரிடம் உயர்வாக இருப்பது என்ன? அவர் சொல்லமுடியாத பல சோதனைகளைச் சந்தித்தவர். வாழ்க்கை முழுவதும் தொடர் பிரச்சினைகளைச் சந்தித்தார். ராஜ்ஜியத்தை இழந்தார், மனைவியை இழந்தார், குழந்தைகளை இழந்தார், கிட்டத்தட்ட குழந்தைகளையே கொல்ல சென்றார்… போர் புரிய தேவை ஏற்பட்டது. இவ்வாறு தொடர்ந்து பிரச்சினைகள்…
இதை எல்லாவற்றையும் தாண்டி, இவற்றை ஆனந்தமாக அமைதியாக எதிர்கொள்கிறார். வலி இருக்கும்போது அவர் ஆனந்தமாக எதிர்கொள்கிறார். அவர் என்ன செயல் செய்தாலும், அவர் எடுக்கிற முடிவுகளில் வலி வெளிப்படாதவாறு பார்த்துக்கொள்கிறார். இதுபோன்று ஒரு மனிதர் நடந்துகொள்ளும்போது, அவரை புருஷோத்தமர் என்று சொல்கிறோம்.
இவர் ஒரு மனிதராக இருப்பது மிக முக்கியம். அயோத்தியில் பிறந்து அங்கேயே இறந்தார். வாழ்க்கை முழுவதும் பிரச்சினைகளைச் சந்தித்தார். இந்தியாவின் தென்பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் வடக்கு நோக்கி சென்றார்.
தனது மனைவியைக் கடத்திச் சென்று, மிகவும் கொடூரமாக ஆட்சி செய்து வாழ்ந்த ஒரு மனிதரைக் கொன்ற பிறகு திரும்பி வந்து ஓராண்டு தவம் புரிந்தார். ஒரு கொடூரமான மனிதர், அவரை கொல்ல வேண்டியதாக இருந்தது. அவரை கொன்ற பிறகு நீங்கள் ஏன் துக்கம் அனுசரிக்கிறீர்கள் என்று ராமரிடம் கேட்டார்கள்.
அதற்கு ராமர், ராவணனிடம் பல எதிர்மறையான அம்சங்கள் இருந்தன. ஆனால் அவர் மிகப் பெரிய பக்தராகவும் இருந்தார். அவருடைய ராஜ்ஜியத்தை மிக அற்புதமாக நடத்தவும் செய்தார். மற்ற எல்லாவற்றையும் சுரண்டி கஷ்டப்படுத்தியதால் கொல்ல நேர்ந்தது. ஆனால் ஒரு பக்தரை கொல்ல நேர்ந்ததே என்று நான் வருத்தப்படுகிறேன் என்று கூறினார்.
ராமரின் குணத்தை நாம் பின்பற்றுவது முக்கியம். இவரை கடவுளாகச் செய்துவிட்டால் சுவரில் தொங்கவிட்டு மறந்து விடுவார்கள். யாருமே ஒரு கடவுளைப் பார்த்து அவரைப் போல் இருக்க முயற்சி செய்ய மாட்டார்கள் . அப்படி இருக்கவே முடியாது.
ராமரை மனிதராக பாவிப்பது மிகவும் முக்கியம். அரசராக இருந்து ராஜ்ஜியத்தை இழந்தார். எனினும் மீண்டு வந்தார். தனது சொத்து சுகம் என அனைத்தையும் விட்டுச் சென்றார். வேறு ஒருவர் வருத்தப்பட்டார் என்ற ஒரே காரணத்துக்காக இதையெல்லாம் விட்டுச் சென்றார்.
இது போன்ற ஒரு மனிதரைப் பார்த்து நாமும் இவரைப் போலவே இருக்க முயற்சி செய்ய வேண்டும். மக்கள் என்ன ஆனாலும் பதவி வேண்டும். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் போக மாட்டேன் என்று சொல்கிற ஒரு காலகட்டத்தில், ராமரைப் பார்த்து வணங்கி அவரை போல் இருக்க முயற்சி செய்வது மிக முக்கியம்.
**இந்தக் கோயில் ஏன் முக்கியம்?**
இந்தியாவின் வடக்குப் பகுதியை எடுத்துக்கொண்டால் ராமர் என்றால் அங்குள்ளவர்களுக்கு உயிர். 500 ஆண்டுகளுக்கு முன்பாக டர்க்கி மற்றும் மங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்தபோது, அவர்கள் படிப்படியாக அனைத்துக் கோயில்களையும் அழிக்க முற்பட்டார்கள்.
ரொம்ப காலத்துக்கு முன்பாக, உருவாக்கப்பட்ட தொன்மையான கோயில்கள் இந்த சமூகங்களின் அடி கல்லாக இருந்தது. அவற்றை எல்லாம் அழித்து அதற்குமேல் , கொடூரமான கட்டடங்களை உருவாக்கினார்கள். இந்த ஒரு பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில், 135 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருந்தது.
இது எதனால் என்றால், நாம் ஒருவிதமான மனப்பான்மையை உருவாக்கி இருக்கிறோம். என்ன ஆனாலும் சரி, அரசியல் ரீதியாக சரியாக இருக்க வேண்டும் என்று இந்த தேசத்தில் ஓர் உணர்வு வந்துவிட்டது. எந்த ஒரு நீதிபதியும் இதை பற்றி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. எல்லோரும் இதை தாமதப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் காலம் முடிந்து அடுத்தவர் பிரச்சினையைச் சந்திக்கட்டும் என்று தள்ளிவிட்டு கொண்டே இருந்தார்கள்.
ஏனென்றால் இரு சமூகங்கள், இது யார் சொத்து என்று சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்கள். நீண்ட நடைமுறைகளுக்குப் பிறகு இந்தப் பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றத்தால் ஒரு முடிவு வந்துள்ளது. தொல் பொருள் ஆதாரங்கள் எல்லாம் பார்த்த பிறகு, இங்கு ஒரு கோயில் இருந்தது, அது இடிக்கப்பட்டது. அதற்கு மேல் வேறு கட்டடங்கள் கட்டினார்கள் என்று ஆதாரங்கள் கிடைத்த பிறகு, அங்கு ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று சொன்னார்கள்,
வேறு ஒரு சமூகத்துக்கு, வேறு ஒரு நிலம் கொடுத்திருக்கிறார்கள். இது இன்னும் ஒரு கோயில் அல்ல. பழைய கோயில் மறுபடியும் எழுப்பப்படுகிறது. இந்தியாவுடைய உற்சாகம் மறுபடியும் எழுப்பப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தினரோ, பிரிவினரோ ராமரை உயர்வாகப் பார்க்கவில்லை. வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும் ராமரைப் பார்த்து அவரை போன்றே இருக்க வேண்டும் என்று வழிபாடு செய்கிறார்கள்.
அதனால் பல விதங்களில் ராமர், ராமாயணம், ராமரின் கதை என அனைத்தும் இந்தியாவின் அத்தியாவசியமாக இருந்து வந்துள்ளது. இது உடைந்து போன ஒரு தேசிய உணர்வை மீண்டும் எழுப்புவதற்கு சமமானது. எனவே ராமர் கோயில் எழுப்புவதை நல்ல விஷயமாக நான் நினைக்கிறேன். இல்லை என்றால் தேவை இல்லாத ஒரு வெறுப்பு வேறு சமூகங்கள் மீது தொடர்ந்துகொண்டே இருக்கும்.
இந்தத் தீர்ப்பால் பல இதயங்களும், நெஞ்சங்களும் குளிர்ச்சி அடைந்துள்ளது. தேவையில்லாத உரசல்கள் இரு சமூகங்களுக்கு இடையே தொடராமல் இருக்கும். ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டி, வேகமாகக் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக இதற்கான தூண்கள் எல்லாவற்றையும் செதுக்கியிருக்கிறார்கள். கல் வேலை எல்லாம் தயார்படுத்தப்பட்டு வேறு எங்கேயோ வைத்திருக்கிறார்கள். 24 அல்லது 30 மாத காலத்தில் இந்த அற்புதமான கோயில் கட்டி முடிக்கப்படும் என்று நினைக்கிறேன். கொரோனா பரவல் சூழ்நிலை காரணமாக, 150 பேரை தான் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைத்திருக்கிறார்கள். இல்லை என்றால் பல லட்சம் மக்கள் இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்திருப்பார்கள். இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
**-கவிபிரியா**�,”