கோயில் திருவிழாக்கள், ரம்ஜான்: ஆடுகள் விற்பனை அமோகம்!

Published On:

| By admin

கோயில் திருவிழாக்கள், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, மேலப்பாளையம் சந்தையில் ஆடு, கோழி விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு ஆடு 23,000 ரூபாய்க்கு விற்பனையானது.
நெல்லை மேலப்பாளையத்தில் மாநகராட்சி கால்நடை சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு நெல்லை மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் தங்களது ஆடு, மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். சந்தைக்கு வெளிப்பகுதியில் டக்கரம்மாள்புரம் ரோட்டில் இருபுறமும் ஏராளமான வியாபாரிகள் கோழி வகைகள், கருவாடு மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை விற்பனைக்காக குவித்து வைத்திருந்தனர்.
ரம்ஜான் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று சந்தையில் செம்மறி ஆடுகளை வியாபாரிகளிடம் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கினார்கள். இதனால் விற்பனை அமோகமாக இருந்தது. மேலும் சித்திரை மாதத்தில் குலதெய்வ கோயில்களில் திருவிழா, வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அப்போது ஆட்டு கிடாய், சேவல் பலியிட்டு பூஜைகள் நடைபெறும். இதற்காக ஆடுகளை அதிகமானோர் வாங்கியதால் ஆடுகளின் விலை அதிகரித்து இருந்தது. இதே போல் சேவல்களின் விலையும் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
ஆடுகள் எடைக்கு ஏற்ப விற்பனையானது. ஒரு ஆடு ரூ.5,000 முதல் ரூ.23,000 வரை விலை போனது. சந்தைக்கு மக்கள் அதிக அளவில் வந்ததால் கூட்டமாக காணப்பட்டது. நேற்று பல லட்சம் ரூபாய்க்கு ஆடு, கோழிகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

**-ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share