ராமநாதபுரம் மாவட்டத்துக்கான புதிய மருத்துவக் கல்லூரியை இன்று (மார்ச் 1) காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டினர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை வகித்த இந்த விழாவில் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய தலைமைச் செயலாளர் சண்முகம், “2019 ஆம் ஆண்டில் மட்டும் 11 மாவட்டங்களில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் துவங்க அனுமதி பெற்றிருக்கிறோம். இப்போது தமிழகத்தில் தென்காசி, பெரம்பலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள், கடலூர், காஞ்சிபுரம் தவிர தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கூட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட மருத்துவக் கல்லூரியும், காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியும் இருக்கின்றன. இனி உயர் சிகிச்சைக்கு மதுரை செல்ல வேண்டிய தேவையில்லாமல் ராமநாதபுரத்திலேயே மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் அமைகின்றன.
345 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 300 மருத்துவர்கள், 600 செவிலியர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்” என்றார் .
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, “மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்தவர்ஷனின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றிருக்காது. ராமநாதபுரம் மாவட்டத்தை ஒரு காலத்தில் வறண்ட மாவட்டம் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது முதல்வர் எடப்பாடி இதை வளர்ச்சி திரண்ட மாவட்டமாக உருவாக்கியிருக்கிறார்கள். அப்துல் கலாமின், அம்மாவின் கனவை நனவாக்கியிருக்கிறார். 325 கோடிதான் முதலில் திட்டமிட்டோம். ஆனால் முதல்வர் மீண்டும் 20 கோடியை ஒதுக்கி 345 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்.
ஒருவருடத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பது அம்மாவின் கனவு. அதை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்கள். அடுத்த ஆட்சியிலும் நிறைய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவோம்” என்றார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, “ கடந்த ஆண்டு மதுரையில் எம்ய்ஸ் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் எய்ம்ஸ் துவங்கும். மோடி அவர்கள் தமிழகத்தின் மீது இருக்கும் பாசத்தோடு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத வர பிரசாதமாக ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரியை துவங்க அனுமதி வழங்கினார். இணையில்லாத ஒத்துழைப்பை இந்த திட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்தவர்ஷன் வழங்கியிருக்கிறார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இனி கூடுதலாக 1100 மருத்துவ மாணவர்கள் படிக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து இன்று மாலை விருதுநகர் மாவட்டத்திலும் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.
**-வேந்தன்**�,