�இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்னை வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியக் கடலோரக் காவல் படையின் முதலீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
நேற்று (செப்டம்பர் 24) மாலை சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்தியக் கடலோரக் காவல் படையில் சிறப்பாகப் பணியாற்றிய 61 அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் பதக்கங்களை வழங்கினார்.
விழாவில் பேசிய அவர், “கடலோர மாநிலங்களான மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பேரழிவு நிவாரண நடவடிக்கையின்போது இந்தியக் கடலோரக் காவல் படை 4000க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றியது.
நம்நாடு அரசு சாரா (non-state) பயங்கரவாதத்திலிருந்தும், அரசு ஆதரவளிக்கும் (state-sponsored) பயங்கரவாதத்திலிருந்தும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது. 26/11 தாக்குதல் (மும்பை தாக்குதல், 2008) கடல் பாதை வழியாக ஊடுருவியதால் மட்டுமே நடந்தது. இனி இதுபோன்ற சம்பவங்களை நம் தேசத்தில் நடக்க விடமாட்டோம் என்பது இந்த அரசாங்கத்தின் வலுவான தீர்மானமாகும்.
இன்று, இந்தியக் கடலோரக் காவல் படை கடல்சார் மண்டலத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் பாதுகாப்புடன் இருக்கிறோம் மற்றும் தேசக் கட்டமைப்பில் சிறந்த பங்காற்றுகிறோம் என நாட்டு மக்கள் உணரும் வகையில் அதை உறுதி செய்வதற்கான சீரிய பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. நிலத்தில் உள்ள பாதுகாப்பு, கடலில் உள்ள பாதுகாப்புடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது” என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.�,”