கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி திடீர் விடுப்பில் சென்றுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அதிகளவு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முன்னிலை பணியாளர்கள் பலருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் ஜெயந்தி திடீர் விடுப்பில் சென்றுள்ளார். இதுதொடர்பாக 12ஆம் தேதி வெளியிட்டப்பட்ட அறிவிப்பில், “டீன் ஆர்.ஜெயந்தி விடுப்பில் சென்றிருப்பதால் சென்னை மருத்துவக் கல்லூரியின் ஹெபடாலஜி பிரிவு இயக்குநரும் பேராசிரியருமான நாராயணசாமி, அடுத்த உத்தரவு வரும் வரை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் புதிய டீனாக கூடுதல் பொறுப்பு வகிப்பார். மேலும், இதுவரையில் மருத்துவமனை டீன் பயன்படுத்திய நிதி மற்றும் நிர்வாக அதிகாரம் அனைத்தும் நாராயணசாமிக்கு வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டீன் ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்று தகவல் வெளியானது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, இந்தியன் எக்ஸ்பிரசிடம் கூறுகையில், “டாக்டர் ஜெயந்தி கடந்த வாரம் முதல் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் விடுப்பில் சென்றுள்ளார். அவருடைய உடல்நிலை பாதிப்பு கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்டது இல்லை. அவர் எப்போது மீண்டும் பணிக்குத் திரும்பி வருவார் என்பது குறித்து உறுதியாகச் சொல்ல முடியாது ” என்று கூறியுள்ளார்.
டீன் விடுப்பில் சென்றது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள திமுக எம்.பி. கனிமொழி, “கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் வேளையில், கொரோனாவுக்கான சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி) மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி திடீரென விடுமுறையில் சென்றிருக்கிறார். அதற்கான காரணம் என்னவென்று தெளிவாகக் கூறப்படவில்லை. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் குழப்பம் நிலவிவரும் சூழலில், இந்த விடுமுறை பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
**-கவிபிரியா**
�,”