டெல்லி கலவரம் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி: ரஜினிகாந்த்

Published On:

| By Balaji

டெல்லியில் நடந்த வன்முறைகள் மத்திய அரசின் உளவுத் துறையின் தோல்வி என்றும் குறிப்பாக உளவுத் துறையைக் கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி என்றும் நடிகர் ரஜினிகாந்த் சாடியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, “சிஏஏ-வினால் இந்தியாவில் வாழும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மற்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாகத்தான் அந்த பிரச்சினை உள்ளது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என்று பெரிய பீதியை கிளப்பிவிட்டுவிட்டார்கள். அது எந்த வகையில் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது? பிரிவினையின்போது இங்கிருக்கும் இஸ்லாமியர்கள், இந்தியாதான் தங்களது ஜென்மபூமி என்று கூறி இங்கேயே வாழ்ந்துவருகிறார்கள். அவர்களை எப்படி இந்தியாவிலிருந்து அனுப்புவார்கள். அதுபோன்று ஏதாவது நடந்தால் இஸ்லாமியர்களுக்காக இந்த ரஜினிகாந்த் முதலில் குரல் கொடுப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் கடந்த சில நாட்களாகக் கலவரம் நடந்து வருவது பற்றியும், இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது பற்றியும் ரஜினி ஏன் கருத்துச் சொல்லவில்லை என்று திமுக எம்.பி.செந்தில்குமார் உட்பட பலரும் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து இன்று(பிப்ரவரி 26) மாலை, தனது போயஸ் கார்டன் இல்ல வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது, “சிஏஏ சட்டத்தால் பாதிக்கப்பாட்டால்தான் முதல் ஆளாக நிற்பேன்” என்று சொன்னதாக தன் மீதான விமர்சனத்துக்கு விளக்கமளித்தார்.

டெல்லி வன்முறை குறித்து கருத்து தெரிவித்த அவர், “இது மத்திய அரசின் உளவுத் துறையுடைய தோல்வி. உளவுத் துறை தோல்வி என்றால் அது உள்துறை அமைச்சகத்தின் தோல்வி. இதற்காக மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லி வந்திருக்கும் போது எவ்வளவு எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். உளவுத்துறை அவர்களுடைய வேலையை சரியாகச் செய்யவில்லை. இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். இனிமேலாவது எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.

மேலும் அவர், “சில கட்சிகள் சில மதத்தினரை வைத்து போராட்டங்களை தூண்டிவிடுகின்றனர். இது சரியான போக்கு கிடையாது. இதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவில்லை என்று சொன்னால் வரும் காலத்தில் பெரிய பிரச்சினையாகிவிடும். சிஏஏ சட்டத்தைப் பொறுத்தவரை அதனைத் திரும்பப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது. என்ன போராட்டம் நடத்தினாலும் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது என்னுடைய கருத்து. தொடர்ந்து நான் பிஜேபி-யின் ஊதுகுழல், பிஜேபியின் ஆள், பிஜேபி என் பின்னால் இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். அதிலும் சில மூத்த பத்திரிகையாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் ஆகியோர் இப்படிச் சொல்வதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. எது உண்மையோ அதைத்தான் நான் சொல்கிறேன்” என்று கூறினார் ரஜினி.

டெல்லி வன்முறையில் இஸ்லாமியர்கள் இலக்கு வைக்கப்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பியதற்கு, “இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எரிய வேண்டும். இதனை மத்திய மாநில அரசுகள் சீரியஸாக கையாள வேண்டும். வன்முறையை ஒடுக்கவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிடலாம். வன்முறைக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பது என்னுடைய வேண்டுகோள்” என்றார்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share