தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணைக்கு நேரில் ஆஜரானால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று ரஜினி கூறியிருந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது, போராட்டக் களத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டனர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் ஒருநபர் விசாரணை ஆணையம், நேரில் ஆஜராகி இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று ரஜினிக்குச் சம்மன் அனுப்பியிருந்தது.
பிப்ரவரி 25ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பிய நிலையில், அதற்கு விலக்கு கேட்டிருந்தார் ரஜினி. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகப் பயப்படுவது ஏன் என்று பலதரப்பினரும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து மின்னம்பலத்தில் [ஆணைய ஆணை: ரஜினி பதுங்கும் பின்னணி!]( https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2020/02/24/13/rajini-avoid-tuticorin-police-firing-enquiry-commission-why) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 25), செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் முருகன், “ரஜினிகாந்த் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராக முடியாது என்று தனது வழக்கறிஞர் மூலம் விளக்க மனு அளித்திருந்தார். அதில் நான் வந்தால் ரசிகர்கள் ஒன்று கூடி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், தொழில் நிமித்தமாகத் தேதிகள் ஒதுக்கியிருப்பதால் நேரில் வரமுடியவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதில் ரசிகர்கள் ஒன்று கூடி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அவர் கூறுவதை ஏற்க முடியாது, ஆனால் தொழில் நிமித்தமாகத் தேதிகள் ஒதுக்கியிருப்பதாகக் கூறியிருப்பதை ஏற்று அவரை மாற்றுத் தேதியில் நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்பப்படும்” என்று தெரிவித்தார்.
இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ”தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது. இதில் யார் யாரை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்பது ஆணையத்தின் முடிவு. நடிகர் ரஜினி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிப்பது என்பதும் அவருடைய விருப்பத்துக்கு உட்பட்டது. அதுபோன்று ரஜினிக்கு விலக்கு அளிக்கலாமா? கூடாதா? என்பது ஆணையத்தின் முடிவு. இதில் அரசு தலையீடு கிடையாது” என்றார்.
அப்போது அவரிடம் சட்டம் ஒழுங்கை கெடுக்கக்கூடியவர்களைத் தான் ரஜினி ரசிகர்களாக வைத்துள்ளாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ”இதுகுறித்து ரஜினியிடம் தான் கேட்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரைச் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது. ரஜினிக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
**கவிபிரியா**�,”