முன்னணி பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். சில நாட்களாகவே இணையம் முழுதும் எஸ்பிபியின் உடல் நலம் குணமடையக் கோரி பல்வேறு தரப்பினரும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்தும் இணைந்துள்ளார். நடிகர் ரஜினியின் திரைப்படங்களில் முதலில் இடம்பெறும் ஓப்பனிங் பாடல் பெரும்பாலும் எஸ்பிபியாலேயே பாடப்பட்டு வெற்றியடைந்திருக்கிறது. ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன், ஒருவன் ஒருவன் முதலாளி என ரஜினியின் லேட்டஸ்ட் படமான தர்பார் வரை எண்ணற்ற ஹிட்டுகளை ரஜினிக்காக பாடியவர் எஸ்பிபி.
Get well soon dear Balu sir pic.twitter.com/6Gxmo0tVgS
— Rajinikanth (@rajinikanth) August 17, 2020
இந்நிலையில் இன்று (ஆகஸ்டு 17) ரஜினிகாந்த் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், “ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல இந்தியாவின் பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி கோடி கோடி மக்களை மகிழ்வித்த, மகிழ்விக்கக் கூடிய எஸ்பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாய கட்டத்தைத் தாண்டிட்டாரு என்று கேள்விப்பட்டதுல எனக்கு மகிழ்ச்சி. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் எஸ்பிபி சார் சீக்கிரம் குணமடைந்து வரணும்னு எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று உருக்கமாகக் கூறியிருக்கிறார் ரஜினி.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 13 இரவு முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதனால் பலரும் அதிர்ச்சியாக, எஸ்பிபியின் மகன் சரண் நேற்று, “அப்பாவின் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கு. டாக்டர்களை தெரிந்துகொள்கிறார். வென்ட்டிலேட்டர் வைக்கப்பட்டாலும் சில நாட்கள் முன்பு இருந்ததை விட இப்போது சுவாசம் பெட்டராகியிருக்கு” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் ரஜினி, எஸ்பிக்காக குரல் கொடுத்திருக்கிறார்.
**-வேந்தன்**�,”