நடிகர் ரஜினிகாந்த், தன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று கூறியதை அடுத்து அவர் வீட்டுக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பப் பெறப்பட இருக்கிறது.
கடந்த ஜனவரியில் துக்ளக் விழாவில் ரஜினி சேலத்தில் நடந்த திராவிடர் கழக ஊர்வலம் பற்றி பேச அது பெரும் சர்ச்சையானது. ரஜினிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. ரஜினி வீட்டை நோக்கி சில அமைப்புகள் முற்றுகைப் போராட்டம் நடத்தின. இதனால் சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் ரஜினி காவல்துறையிடம், போலீஸ் பாதுகாப்பினால் அருகே வசிப்பவர்களுக்கு சிரமமாக இருப்பதாகவும் அதனால் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து நேற்று (பிப்ரவரி 29) ரஜினியை சென்னை உளவுப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் சு.திருநாவுக்கரசர் அவரது வீட்டில் சந்தித்து பாதுகாப்பு பற்றி ஆலோசித்தார். இந்தநிலையில் ரஜினிகாந்த் வேண்டுகோளை ஏற்று அவருடைய வீட்டில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.
ஆனால் இதற்குக் காரணமே வேறு என்கிறார்கள் ரஜினிதரப்பில்.
“அரசின் போலீஸ் பாதுகாப்பு இருப்பதால் தினந்தோறும் ரஜினியை யார் யார் சந்திக்க வருகிறர்கள், எவ்வளவு நேரம் பேசுகிறார்கள் போன்ற விவரங்கள் காவல்துறை மேலிடத்துக்கு சென்று அதன் மூலம் அரசுக்கு சென்று கொண்டிருக்கின்றன. பல அதிகாரிகள், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஏன் சில அமைச்சர்கள் கூட ரஜினியை சந்தித்துச் செல்கிறார்கள். ரஜினியின் அரசியல் மூவ்மென்ட்டுகளை அறிந்துகொள்ளவும், ரஜினி பக்கம் யார் யார் போகப் போகிறார்கள் என்பதை கண்டுபிடிக்கவும் ஒரு கருவியாக இந்த போலீஸ் பாதுகாப்பை அரசு பயன்படுத்துகிறது. இதை நன்கு உணர்ந்துகொண்ட ரஜினி, அதன் விளைவாகத்தான் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பாதுகாப்பு என்ற பெயரில் தன்னைக் கண்காணிக்கும் அரசின் முயற்சியை இதன் மூலம் முதல்கட்டமாக முறியடித்திருக்கிறார் ரஜினி” என்கிறார்கள்.
**-வேந்தன்**�,