இ பாஸ் சர்ச்சை: போலீஸ் அதிகாரியை காப்பாற்றும் ரஜினி

Published On:

| By Balaji

ஜூலை 19 ஆம் தேதி சமூக தளங்களில், ‘லயன் இன் லம்பார்ஹினி’ என்ற அடைமொழியோடு பகிரப்பட்டது அந்த ஒற்றைப் புகைப்படம். லம்பார்ஹினி காரில் ரஜினிகாந்த் முகக் கவசம், சீட் பெல்ட் அணிந்தபடி ஓட்டிக் கொண்டிருக்கிறார். ‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சாதான் ரஜினி வெளியே வருவார்’ என்ற விமர்சனத்தை உடைப்பதற்காக ரஜினியின் அனுமதியுடனே இந்தப் புகைப்படம் சமூக தளங்களில் வெளியிடப்பட்டது. மேலும், பண்ணை வீட்டுப் பகுதியில் ரஜினிகாந்த் நடைபயிற்சி செல்லும் வீடியோவும், குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படமும் வெளியானது.

**இ பாஸ் கேள்விகள்!**

இதை ரஜினி மக்கள் மன்றத்தினர் கொண்டாடிக் கொண்டிருக்க ரஜினி எதிர்ப்பாளர்களோ, ‘சரி… ரஜினி வெளியே சென்று வருகிறார். கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு சென்று வருகிறார். கேளம்பாக்கம் பண்ணை வீடு செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் போனதற்காக இ பாஸ் எடுத்தாரா ரஜினி? சிஸ்டம் சரியில்லை என்று சொல்லிக் கொண்டே ரஜினி சிஸ்டத்தை உடைக்கலாமா?” என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர். சமூக தளங்களில் நடந்த விவாதம் ஊடகங்களிலும் செய்தியான நிலையில் ஜூலை 22 ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் செய்தியாளர்கள் ரஜினியின் இ பாஸ் குறித்துக் கேள்வி எழுப்பினர்.

“ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா என்பது குறித்து ஆய்வு செய்தே கூற முடியும். மீண்டும் கேளம்பாக்கத்திலிருந்து சென்னை வருவதற்கு இ-பாஸ் வாங்கினாரா என்பதும் ஆய்வு செய்யப்படும்” என்று பதிலளித்தார். மாநகராட்சி ஆணையர் இவ்வாறு தெரிவித்ததும் மறுநாள் ஜூலை 23 ஆம் தேதி ரஜினி சென்னை போயஸ் கார்டன் வீட்டில் இருந்து கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு செல்ல இபாஸ் வாங்கியிருக்கும் விவரம் சமூக தளங்களில் ரஜினி தரப்பாலேயே வெளியிடப்பட்டது. மருத்துவ அவசரத்திற்காக (medical emergency) கேளம்பாக்கம் செல்வதாகக் குறிப்பிட்டு, கார் டிரைவருக்கும் சேர்த்தே இ-பாஸ் கேட்கப்பட்ட நிலையில் ரஜினிக்கு பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு சர்ச்சைக்கு விடையளிக்கலாம் என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்ட இந்த பாஸ் அடுத்தடுத்த சர்ச்சைகளுக்கும் வித்திட்டது.

ஜூலை 23 ஆம் தேதி இ பாஸ் எடுத்த ரஜினி, எப்படி அதற்கு முன்பே, லம்பார்ஹினி காரை ஓட்டிக் கொண்டு செல்கிறார்? அப்படியெனில் அதற்கு முன், தான் பெற்ற இ பாஸை வெளியிடலாமே? கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க செல்லுவதற்கு மெடிக்கல் எமர்ஜென்சி என்ற வகையில் பாஸ் எப்படி வழங்கப்பட்டது? பல்வேறு தரப்பினர் நியாயமான மருத்துவக் காரணங்கள் இருந்தும் இ பாஸ் நிராகரிக்கப்பட்ட நிலையில், ரஜினி ஓய்வெடுப்பது மெடிக்கல் எமர்ஜென்சியா? இப்படிப் பலப் பலக் கேள்விகள் ரஜினியை நோக்கியும் அரசை நோக்கியும் எழுந்தன.

**கேளம்பாக்கம் பயணம் எதற்காக?**

ரஜினி போயஸ் கார்டனில்தான் இருக்கிறார். ஆனால் சமீப நாட்களாக தினந்தோறும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு சென்று வருகிறார். அங்கே ரஜினிக்காக பிசியோதெரபி நிபுணர் ஒருவரை நியமித்திருக்கிறார்கள் ரஜினி குடும்பத்தார். பிசியோதெரபி மட்டுமல்ல நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, மண் குளியல், சூரியக் குளியல் என வாரம் முழுதும் வெவ்வேறு வகைகளில் உடல் நலனுக்கான பல்வேறு நலப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ரஜினி. முற்பகல் போயஸ் கார்டனில் இருந்து கிளம்பி பண்ணை வீட்டுக்கு சென்றுவிட்டு அங்கே மூன்று மணி நேர பயிற்சிகளை முடித்துவிட்டு மாலை வீட்டுக்குத் திரும்பிவிடுவது என்பதுதான் ரஜினி குடும்பத்தினரின் திட்டம். கேளம்பாக்கத்தில் ஒரு செக் போஸ்ட் இருக்கிறது. பண்ணை வீட்டுக்கு போவதற்கு முன் அந்த செக் போஸ்டை கடந்தாகவேண்டும். சென்னையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் தினமும் சென்று வருவதற்கு கொரோனா ஊரடங்கு உத்தரவு விதிகளின்படி அனுமதியில்லை. ஏற்கனவே ரஜினி, அரசின் உத்தரவுகளை தவறாமல் கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்நிலையில் அந்த விதிகளை தானே கடைபிடிக்காமல் இருந்தால் தவறு என்று ரஜினி எண்ணியிருக்கிறார். அதனால் தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் பாஸ் வாங்கியிருக்கிறார்.

**செக்போஸ்டில் ரஜினி**

ரஜினி காந்த் இந்த ஊரடங்கு நாட்களில் முதல் முறையாக கேளம்பாக்கம் பண்ணைவீட்டுக்கு சென்றபோது செக் போஸ்ட்டில் ரஜினியின் காரையும் நிறுத்தியிருக்கிறார்கள் போலீஸார். பாஸ் கேட்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த் அப்போது போலீசாரிடம் பாஸை காட்டியிருக்கிறார். அந்த பாஸைப் பார்த்த போலீசார் சென்னை மாநகர உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு போன் செய்து, ‘ரஜினி சார் இங்கே வந்திருக்கிறார். அவரிடம் பாஸ் கேட்டோம். அவர் ஒரு பாஸ் கொடுத்திருக்கிறார்’ என்று அந்த பாஸ் பற்றிய விவரங்களைத் தெவித்திருக்கிறார்கள். அங்கிருந்து, ‘அது முறையாக வழங்கப்பட்ட பாஸ்தான். அவரை நிறுத்தாதீர்கள்’ என்று உத்தரவு வர, அனுமதித்துவிட்டார்கள் போலீசார். மறுநாள் செக் போஸ்டில் டூட்டி பார்க்கும் போலீசார் மாறியிருந்த நிலையில் அன்றும் ரஜினியின் கார் நிறுத்தப்பட்டது. அன்றும் அதேபோல போலீஸார் சென்னை உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு போன் செய்து அந்த பாஸை உறுதிப்படுத்திக் கொண்டு ரஜினியை அனுமதித்திருக்கிறார்கள். இதன் பிறகு பிரச்சினை ஏதும் இல்லாமல், தொடர்ந்து கொண்டிருந்தது ரஜினியின் போயஸ் கார்டன் -கேளம்பாக்கம் பயணம். லம்பார்ஹினி காரில் ரஜினியின் புகைப்படம் வைரலான பிறகு இ பாஸ் சர்ச்சை வெடித்தபிறகுதான், ரஜினிக்கு இ பாஸ் பற்றிய விவரங்களே தெரிந்திருக்கின்றன. தான் வைத்திருக்கும் இதே போன்ற பாஸ்தான் எல்லாருக்கும் கொடுக்கப்படுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. இந்த சர்ச்சை வெடித்த பிறகுதான் ஜூலை 23 ஆம் தேதி மெடிக்கல் எமர்ஜென்சி என்ற பெயரில் விண்ணப்பித்து மாநகராட்சியிடம் இருந்து இ பாஸ் வாங்கியிருக்கிறார் ரஜினி. ஏற்கனவே, மாநகராட்சியிடம் இருந்து ரஜினி இ பாஸ் வாங்கவில்லை என்பதால்தான் மாநகர ஆணையர் பிரகாஷ் ரஜினியின் இ பாஸ் பற்றிய கேள்விக்கு ஆராயப்படும் என்று பதிலளித்திருந்தார்.

**ரஜினி பயன்படுத்திய பாஸ் எது?**

அப்படியென்றால் அதற்கு முன் ரஜினி பயன்படுத்திக் கொண்டிருந்த பாஸ் எது?

ரஜினி கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு தினந்தோறும் சென்று வரலாம் என்று முடிவான பிறகு சென்னை மாநகர உளவுத்துறை துணை ஆணையர் திருநாவுக்கரசுவிடம் ரஜினி சார்பில் இதுபற்றிப் பேசியிருக்கிறார்கள். அவர்தான், ‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லீங்க. நானே உங்களுக்கு பாஸ் தர்றேன். இந்த பாஸ் வச்சிருந்தால் யாரும் நிறுத்த மாட்டாங்க’ என்று சொல்லி, சென்னை மாநகர காவல்துறை சார்பில் கொடுக்கப்படும் பாஸ் ஏற்பாடு செய்து அதில் தானே கையெழுத்தும் போட்டுக் கொடுத்திருக்கிறார். அந்த போலீஸ் பாஸை பயன்படுத்திதான் ரஜினி இதுவரைக்கும் கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு தினமும் சென்று வந்திருக்கிறார். முன்பு எடுக்கப்பட்ட பாஸ் எங்கே என்று ரஜினியை நோக்கி வீசப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ரஜினி மௌனமாகவே இருக்கிறார். ரஜினி இந்த விவகாரத்தில் விளக்கம் கொடுக்கத் தயார்தான். ஆனால் தனக்காக பாஸ் எடுத்து உதவிய போலீஸ் அதிகாரி திருநாவுக்கரசுக்கு ஏதும் சங்கடம் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே ரஜினி மௌனம் காக்கிறார் என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்களும்,ரஜினியின் குடும்பத்தாரும்.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share