ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு கண்காணிக்கப்படும்: நீதிமன்றம்!

Published On:

| By Balaji

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு அடிக்கடி கண்காணிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது காவல் துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனிடையே ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுத்துக்கொண்டது.

இவ்வழக்கு நேற்று (மார்ச் 1) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், “டிஜிபி மீது புகார் வந்தவுடன் அவருக்கு எதிராக உடனடியாக வழக்குப் பதியப்பட்டது.

பிப்ரவரி 26ஆம் தேதி புகார் வந்தவுடன் வழக்கு சிபிசிஐடிக்கு அனுப்பப்பட்டு 27ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் எஸ்.பி. முத்தரசி தலைமையில் விசாரணை மாற்றப்பட்டது” என்று தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கும். விசாரணையின் முன்னேற்றம் குறித்துக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்,

மேலும், ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் புகார் கொடுப்பதற்கு இவ்வளவு அலைக்கழிக்கப்பட்டு இருக்கிறார் என்றால், சாதாரணப் பெண் காவலர்கள் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த விவகாரம் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால்தான் அரசியலமைப்புச் சட்டம் நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஊடகங்கள் இதை விவாதப் பொருளாக்க வேண்டாம்.

பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் கொடுத்த விவகாரத்தில், அரசியல் செய்ய வேண்டாம். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது” என உத்தரவிட்டு வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்குப் பரிந்துரை செய்தார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share