பாதுகாப்பு காரணங்களால் இதுவரை கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவி வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் மிகப்பெரும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதியமைச்சர் பஷில் ராஜபக்சே ஆகியோர் பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறினர். நாட்டை விட்டு வெளியேறும் வரை பதவி விலகப்போவதில்லை என்று அறிவித்த அதிபர் கோத்தபய ராஜபக்சே, நேற்று ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பினார்.
அங்குத் தஞ்சமடைந்த நிலையில் அதிபர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது பதவியை ராஜினாமா செய்யாமல், நாடு திரும்பும் வரை இடைக்கால அதிபராகப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே செயல்படுவார் என்று அறிவித்தார். இதுகுறித்து நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்கே ”நாட்டில் பாசிச சக்திகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அவசர நிலையையும், ஊரடங்கையும் அமல்படுத்துமாறு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கிறேன். அனைத்துக்கட்சி ஆதரவு பெற்ற அரசு அமையும்போது நான் பதவி விலகுவேன்” என்று தெரிவித்தார்.
எனினும் இடைக்கால அதிபர் பதவியிலிருந்து ரணில் உடனடியாக விலக வேண்டும் என்று கூறி அவரது அலுவலகத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அங்குப் பெருங்கூட்டம் கூடியதைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் பலர் காயமடைந்துள்ளனர். சுமார் 45 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 வயதுடைய நபர் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு இலங்கையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் மாலத்தீவுக்குத் தப்பியோடிய கோத்தபய ராஜபக்ஷே அங்குத் தஞ்சமடைய அரசு அனுமதிக்கக் கூடாது என தலைநகர் மாலேயில் உள்ள அதிபர் மாளிகை முன்பாக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அங்கிருந்து சிங்கப்பூருக்குச் செல்ல உதவும்படி மாலத்தீவு அரசை கோத்தபய கேட்டுக்கொண்டார். ராஜபக்சே, அவரது மனைவி லோமா மற்றும் அவர்களது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று இரவு மாலேயில் இருந்து SQ437 விமானத்தில் சிங்கப்பூர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இதுவரை கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் விமானத்தில் ஏறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூர் செல்வதற்குத் தனி விமானம் வழங்குவது தொடர்பாக மாலத்தீவு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுபோன்று கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
– கிறிஸ்டோபர் ஜெமா