மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிவர் புயலில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு, இந்த ‘மார்கழி மழை’ பேரிடியாகவே வந்திருப்பதை, ஏனோ இன்னும் அதிமுக அரசு உரிய முறையில் அணுகுவதாகத் தெரியவில்லை. வடி வாய்க்கால்களைத் தூர்வாரும் பணியில் கோட்டைவிட்ட அதிமுக அரசு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதிலும் கோட்டைவிட்டு, குறட்டைவிட்டுத் தூங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நிவர் புயல் பாதிப்புக்குள்ளான நிலங்களுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்கிட வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஏற்காத அதிமுக அரசு, ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்று செய்த அறிவிப்பு, விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அறிவிக்கப்பட்ட அந்த நிவாரணமும் இன்னும் முழுமையாக தங்கள் கைகளுக்கு வந்து சேரவில்லை எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குமுறுகிறார்கள், கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே நிவர் புயலுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ரூ.600 கோடி நிவாரணத் தொகை என்ன ஆனது? எத்தனை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் போய்ச் சேர்ந்தது? மத்திய பாஜக அரசிடம் கோரிய ரூ.3,758 கோடி நிதி என்ன ஆனது?” என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின்,
இப்போது ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு விவசாயிகளின் வாழ்வில் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற சூழலில், நாசமாகியுள்ள நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல், ‘இனிமேல்தான் கணக்கு எடுக்கப் போகிறோம்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலிருக்கிறது. எனவே, மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும் என்றும் ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்குவதை உறுதிசெய்து, பயிர்க் காப்பீட்டுத் தொகையும் எவ்வித தாமதமுமின்றி கிடைப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், “பொங்கல் விழா இந்த ஆண்டு மகிழ்ச்சி பொங்க கொண்டாடவேண்டியதற்குப் பதிலாக, விவசாயிகள் துயரம் துடைக்கப்பட முடியாத துன்ப வெள்ளத்தில் மூழ்கி வெளியே வரமுடியாமல் தவிப்பது வேதனையாக உள்ளது. பயிர் அறுவடை செய்வதற்குத் தயாரான நிலையில், கடும் மழை எதிர்பாராமல் தொடர்ந்து பெய்த காரணத்தால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிட்ட விவசாயிகளின் வேதனை வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாத மிகப்பெரிய அவலமும், பரிதாபமும் உள்ளது” என்று தெரிவித்துள்ள அவர்,
“முதலில் ஓர் இடைக்கால நிவாரண உதவியையாவது, தமிழக அரசு பாதிக்கப்பட்ட அந்த விவசாயக் குடும்பத்தினருக்கு போர்க்கால அடிப்படையில் முதல் உதவியைப்போல செய்வதற்கு ஓர் அவசரத் திட்டம் தீட்டப்பட வேண்டாமா? உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சுவதில்லை என்ற நிலையில் இருந்து விவசாயிகள் என்று மீளுவார்கள்? மத்திய-மாநில அரசுகள் மனிதநேயத்தோடு மக்களாட்சியில் நடந்துகொள்ள வேண்டாமா? விவசாயிகளின் கண்ணீர் எரி மலையாவதற்குள் பரிகாரம் காண வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு நிவர் மற்றும் புரெவி புயல்கள் மற்றும் தொடர்மழையால் நெற்பயிர்கள் உள்பட பலவகைப் பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. தாளடி சாகுபடியில் தண்ணீர் தேங்கியதால் நடப்பட்ட பயிர்கள் அழுகிவிட்டன. சம்பா பயிர்கள் விளைந்து, முதிரும் பருவத்தில் நெல்மணிகள் அவிழ்ந்து, விளைந்த கதிர்கள் தொடர் மழையால் முளைப்பு விட்டு சேதமடைந்துவிட்டன.
இதேபோல் நிலக்கடலை, உளுந்து போன்ற எண்ணெய் வித்து மற்றும் பருப்புவகை பயிர்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் ஏக்கருக்கு 30,000 ரூபாய் கோரப்பட்ட நிலையில், 8,000 மட்டுமே இழப்பீடாக அறிவித்திருப்பது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. சேதாரத்தை ஈடுகட்டி விவசாயிகள் மறுவாழ்வு தொடங்க தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு.30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் சேதாரத்தை முறையாகக் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மழையால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அழுகிய நெற்பயிர்களுடன் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முகசுந்தரம், விவசாயிகள் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பனசை அரங்கன், அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநில இணை செயலாளர் தங்கராசு, தகவல் சட்ட ஆர்வலர்கள் கூட்டமைப்பு வக்கீல் பிரகாஷ், நம்மாழ்வார் வாழ்வாதார பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், நிர்வாகி விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் மழையில் நனைந்து அழுகி வீணான நெற்கதிர்களுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று (ஜனவரி 16) வந்தனர். அவர்கள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், “டெல்டா மாவட்டங்களில் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. எனவே டெல்டா பகுதியை தேசிய பேரிடராக அறிவித்து விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் வழங்குவது ஏற்புடையதாக இல்லை. விவசாயிகள் நலன் கருதி உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏக்கருக்கு நெற்பயிருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
**-ராஜ்**
�,”