கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் குழந்தைகள் வாரத்துக்கு மூன்று நாட்கள் கேழ்வரகை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. கேழ்வரகில் கார்போஹைட்ரேட், கால்சியம் சத்து மிக அதிகமாக உள்ளன. பொட்டாசியம், தையமின், ரிபோஃப்ளோவின், ஃபோலிக் அமிலம், மங்கனீஸ், தாமிரம், மக்னீஷியம், துத்தநாகம் ஓரளவு இருக்கின்றன. கேழ்வரகு எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. ரிலாக்ஸ் டைமுக்கு ஏற்றது இந்த ராகி உருண்டை.
**எப்படிச் செய்வது?**
200 கிராம் கேழ்வரகு மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர்விட்டு அடைகளாகத் தட்டி, காயும் தோசைக் கல்லில் போட்டு சுட்டெடுக்கவும். மிக்ஸியில் ஆறிய கேழ்வரகு அடைகளைப் போட்டு, இரண்டு சுற்று சுற்றவும். இதில், தேவையான அளவு வேர்க்கடலை, வெல்லம் சேர்த்து, மேலும் இரண்டு முறை சுற்றி எடுக்கவும். இந்த கலவையை உருண்டைகளாகப் பிடித்துக் கொடுக்கலாம்.
இனிப்பு பிடிக்கவில்லை என்றால், வெல்லத்துக்குப் பதிலாக கேரட், கொத்தமல்லி, உப்பு சேர்த்து செய்யலாம்.
**சிறப்பு**
உடலுக்குச் சக்தியைக் கொடுக்கும். மலச்சிக்கலைப் போக்கும். எளிதில் ஜீரணமாகும். வேர்க்கடலையில் உள்ள புரதம், வெல்லத்தில் இரும்புச்சத்து குழந்தையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உறுதுணைபுரியும்.�,