சென்னையில் நேற்று (செப்டம்பர் 24) நடைபெற்ற மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் பாடல் வெளியீட்டு விழாவில், ராதிகாவுக்கு ‘நடிகவேள் செல்வி’ பட்டம் வழங்கி படக்குழு கௌரவித்தது.
அஜித் நடிப்பில் உருவான காதல் மன்னன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அமர்க்களம், அட்டகாசம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் என பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் சரண். தற்போது இவர் இயக்கியிருக்கும் படம், மார்கெட் ராஜா எம்பிபிஎஸ். ஆரவ், காவ்யா தாப்பர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் நாசர், நிகிஷா படேல், யோகி பாபு, ரோஹிணி, சாயாஜி ஷின்டே ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.
மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்ஸில் முக்கியமான பாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்திவந்த ராதிகா, ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் நடிக்கும் படம் இது.
பாரதிராஜா இயக்கத்தில் 1978ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதிகா. இன்று போய் நாளை வா, ரெட்டை வால் குருவி, கிழக்குச் சீமையிலே, சிப்பிக்குள் முத்து, நானே ராஜா நானே மந்திரி, கேளடி கண்மணி, ஜீன்ஸ், சூர்ய வம்சம் போன்ற படங்களின் சிறந்த நடிப்புக்காக அறியப்படுபவர் ராதிகா. படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், படத் தயாரிப்பு, நாடகங்கள் தயாரிப்பு எனப் பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருபவர் ராதிகா.
இந்த நிலையில், மிக விரைவில் வெளிவரவுள்ள மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் நடித்துள்ள ராதிகா சரத்குமாருக்கு **நடிகவேள் செல்வி** எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சரத்குமார், இயக்குநர் சரண், ஆர்.கே.செல்வமணி, நாசர், தயாரிப்பாளர் ஏஎல்.அழகப்பன், தனஞ்செயன், ரோகிணி ஆகியோருடன் படக்குழு மொத்தமும் மேடையேறி அவருக்குப் பட்டம் வழங்கி வாழ்த்தியது. ராதிகாவின் தந்தை எம்.ஆர்.ராதா நடிகவேள் என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ராதிகா சரத்குமார் பேசும்போது, “என்னை விழாவுக்கு அழைத்தபோது இந்த அளவு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை. என் அப்பாவின் நினைவும் போற்றப்படுவதில் மகிழ்ச்சி. நான் முதன்முதலில் பாரதிராஜா படத்தில் நடித்தபோது என் தந்தை ஆச்சரியப்பட்டார். நான் சினிமாவில் ஆர்வம் இல்லாமல் இருந்தவள். முதன்முதலாக நடிக்கும்போது மேக்கப்பை தொட்டு என் தொழில் உன்னிடம் இருக்கட்டும் என என்னை ஆசீர்வதித்தார். அவரது (எம்.ஆர்.ராதா) ஆசீர்வாதம்தான் என்னை இந்த இடத்தில் சேர்த்திருக்கிறது. எனக்கு இந்தப் பட்டம் அளித்ததற்கு நன்றி” எனக் கூறினார்.
�,”