ராஜன் குறை
கணக்குத் தீர்ப்பது என்றால் பழிக்குப் பழி அல்ல. இது பழங்கணக்கு; அதாவது நினைவுகளின் கணக்கு. மே மாதம் 25ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பின மனிதரை, அமெரிக்க வெள்ளையின காவலர்கள் கழுத்தில் முழுங்காலால் அழுத்தி கொன்றபிறகு, அமெரிக்காவின் பல பகுதிகளிலும், உலகின் பல பகுதிகளிலும் கறுப்பின மக்கள் மற்றும் முற்போக்காளர்களின் எழுச்சி ஒரு முக்கிய வடிவம் எடுத்துள்ளது. அது என்னவென்றால் நிறவெறியைக் குறிக்கும், நினைவுச் சின்னங்கள், கறுப்பின மக்களை ஒடுக்கியவர்களின் சிலைகள் ஆகியவற்றை அகற்றுகிறார்கள். பல சிலைகள் தகர்க்கப்படுகின்றன. வரலாற்றில் படிந்துள்ள நிறவெறிக் கறையாக இந்த நினைவுச் சின்னங்களும், சிலைகளும் பார்க்கப்படுகின்றன. ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் விசாரணையில் கொலையுண்டதற்கும், இந்த சிலைகளும், நினைவுச் சின்னங்களும் அகற்றப்படுவதற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியில்தான் வரலாற்றின் தடங்கள் புலனாகின்றன.
**அமெரிக்க வரலாற்றில் கறுப்பின அடிமைகள்**
அமெரிக்க கண்டத்தின் பூர்வகுடிகள் சிவப்பிந்தியர்கள் அல்லது அமெரிந்தியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள். அமெரிக்க நிலப்பகுதியை கொலம்பஸ் இந்தியா என்று நினைத்ததால் இவர்கள் அமெரிந்தியர்கள் அல்லது சிவப்பிந்தியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த பூர்வகுடிகளே 1492ஆம் ஆண்டு ஐரோப்பாவிலிருந்து கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் அந்த நிலப்பகுதிக்குச் சென்று இறங்கும் வரை வட அமெரிக்க கண்டத்தின் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். அதைத்தொடர்ந்து ஐரோப்பியர்கள் வட, தென் அமெரிக்க கண்டங்களுக்குச் சென்று குடியேறத் தொடங்கினார்கள். இவர்கள் கொண்டு சென்ற வைரஸ்கள் அங்கிருந்த பூர்வகுடிகளின் உடலுக்கு புதியதாக இருந்ததால் எந்த போரும் இல்லாமலே பெரும் எண்ணிக்கையில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்கள். இன்றைய கொரோனா தாக்குதல் போல அன்றே அமெரிக்க பூர்வகுடிகள் வெள்ளை ஐரோப்பியர் வருகையில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்கள். எஞ்சியவர்களை போரில் துப்பாக்கிகள், பீரங்கிகள் மூலம் ஐரோப்பியர்கள் கொன்றார்கள்.
தாங்கள் ஆக்கிரமித்த புதிய நிலப்பகுதியில் கரும்பு, பருத்தி, காபி, டீ, புகையிலை ஆகியவற்றை தோட்டப்பயிர்களாகப் பெரும் பரப்புகளில் பயிரிட்டார்கள் ஐரோப்பியர்கள். வட அமெரிக்காவில் குறிப்பாக இங்கிலாந்திலிருந்து சென்றவர்கள் பெரும்பாலான இடங்களில் குடியேறினார்கள். ஆனால், இவர்களது பிளேண்டேஷன்ஸ் எனப்படும் தோட்டங்களில் வேலை செய்ய ஏராளமான கறுப்பின மக்களை ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவந்தார்கள். பாப் மார்லியின் புகழ்பெற்ற பஃபல்லோ சோல்ஜர் பாட்டில் வருவது போல “Stolen from Africa, brought to America” என்பது அவர்கள் வாழ்க்கையாக இருந்தது.
18ஆம் நூற்றாண்டின் இறுதியில், 1776ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள் இங்கிலாந்தின் ஆதிபத்தியத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு சுதந்திர நாடாக அறிவித்தார்கள். அந்த சுதந்திரப் பிரகடனத்தின் அறிகுறியாக இங்கிலாந்தின் ஜார்ஜ் மன்னரின் சிலையை அகற்றி அதிலிருந்த ஈயத்தை பிரிட்டிஷ் துருப்புகளுடன் போராட துப்பாக்கிக் குண்டுகள் செய்யப் பயன்படுத்தினார்கள். அமெரிக்கா அரசரில்லாத குடியரசாக, அரசியல் நிர்ணய சட்டத்தின்படி மக்களாட்சி பிரதிநிதிகள் ஆளும்படியான நவீன அரசாக மலர்ந்தது. ஆனால், அந்த நாட்டில் கணிசமான பேர், கறுப்பின மக்கள், சுதந்திரமற்ற அடிமைகளாக, பணம் கொடுத்து வாங்கி விற்கும் பண்டங்களாக, கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் உயிரிகளாக விளங்கினார்கள். கல் நெஞ்சையும் கரையச் செய்யும் கொடுமைகள் பலவற்றை அனுபவித்தார்கள். ஆனால் அமெரிக்கர்கள் பெரும் செல்வந்தர்களாக தங்கள் உழைப்பை நல்கினார்கள்.
நாளாவட்டத்தில் அமெரிக்காவின் வடபகுதி மாநிலங்களில் தொழிற்சாலைகள் பெருகின. ரயில் போக்குவரத்து பரவலானது. விவசாயமும் சுதந்திர வெள்ளை விவசாயிகளால் செய்யப்பட்டது. தென் மாநிலங்களில் அதற்கு மாறாக தோட்டப் பயிர்களும், கறுப்பின அடிமைகளும் மிகுந்திருந்தார்கள். வடமாநிலத்தவர் அடிமை முறைக்கு எதிராக பேசுவதால், தென்மாநிலத்தவர் தனி நாடாகப் பிரிந்து போக முடிவு செய்தார்கள். கான்ஃபெடரேட் மாநிலங்கள் என்ற பெயரில் 11 தென்மாநிலங்கள் பிரிந்து தனி நாடாக முடிவு செய்தன. வடமாநிலங்கள், மத்திய அரசு அவை பிரிந்து போவதை ஏற்கவில்லை. மக்கள்தொகையிலும், பொருளாதார வளத்திலும் வட மாநிலங்கள் வலுவாக இருந்தாலும், தென்மாநிலங்கள் தங்கள் அடிமை முறைக்கு உலகில் ஆதரவு இருக்கும் என நம்பின. அதனால் யூனியன் அல்லது ஃபெடரல் மாநிலங்களான வடமாநிலங்களுக்கும், கான்ஃபெடரேட் என்ற தென்மாநிலங்களுக்கும் உள் நாட்டு யுத்தம் துவங்கியது. தென்மாநிலங்களிலிருந்து கறுப்பின அடிமைகள் வடமாநிலங்களுக்குத் தப்பிச் செல்லத் தொடங்கினார்கள். 1861 முதல் 1865 வரை நான்காண்டுகள் நீடித்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான உயிர்சேதத்துக்குப் பிறகு கான்ஃபெடரேட் மாநிலங்கள் தோல்வியடைந்தன. அதற்கு முன்னரே ஆப்ரஹாம் லிங்கன் அடிமை முறையைச் சட்ட விரோதமானதாக்கி, அனைத்து கறுப்பின மக்களையும் சுதந்திரமானவர்கள் என அறிவித்தார். இதன் பொருள் அனைத்து வெள்ளையினத்தவரும், கறுப்பினத்தவரை சமமாகக் கருதினார்கள் என்பதல்ல. அடிமைகளாக வேலை செய்வதற்குப் பதில், கூலிகளாக வேலை செய்யத் தொடங்கினார்கள். நிற வேற்றுமை பல்வேறு வகைகளில் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
அதனால் தென்மாநிலங்கள் தோல்வியடைந்தாலும், அவற்றை கெளரவப்படுத்தும் போக்கு தொடர்ந்தது. தென்மாநிலங்கள் சார்பாக கான்ஃபெடரேட் ஆர்மியில் போரிட்டு உயிர் துறந்தவர்களுக்குப் பல்வேறு இடங்களில் நினைவுச் சின்னங்களும், சிலைகளும் அமைக்கப்பட்டன. இவை வரலாற்றை நினைவுகொள்ளவே செய்யப்பட்டதாகச் சொன்னாலும் அவற்றில் நிறவெறியை, அடிமை முறையை நியாயப்படுத்தும், கறுப்பர்களை எச்சரித்து வெள்ளையின மேன்மையை அறிவிக்கும் அம்சங்களும் பொதிந்திருந்தன என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். காரணம், உள்நாட்டு போர் முடிந்ததிலிருந்தே கறுப்பர்களைத் தனிமைப்படுத்தும், அவர்களை பொது இடங்களிலும், பள்ளிகளிலும், பணியிடங்களிலும் அனுமதிக்க மறுக்கும் “ஜிம் குரோ” சட்டங்கள் இயற்றப்பட்டன. நூறாண்டு காலம் சமத்துவத்துக்காகக் கறுப்பர்கள் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. 1960களின் இறுதியில்தான் எண்ணற்ற தியாகங்களுக்கும், போராட்டங்களுக்கும் பிறகு, மார்டின் லூதர் கிங் போன்ற தலைவர்களின் முன்னெடுப்பில் கறுப்பர்களுக்கான சிவில் உரிமைகள் முழுமையாகப் பெறப்பட்டன.
சிவில் உரிமைகள் பெறப்பட்டாலும் சமூகத்தில் ஒதுக்குதல், பாரபட்சமாக நடத்துதல் போன்றவை தொடரத்தான் செய்கின்றன. குறிப்பாக காவல் துறையில் பணியாற்றும் வெள்ளைக்காரர்கள் கறுப்பின மக்களை விசாரிக்கும்போது தேவையற்ற வன்முறையில் ஈடுபடுவது பரவலாக நடைபெறும் விஷயம்.
அதற்கெல்லாம் முத்தாய்ப்பாகத்தான் இரண்டு வாரங்களுக்கு முன் ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீசாரால் காரணமின்றி கொல்லப்பட்டபோது போராட்டங்கள் நாடெங்கும் வெடித்தன.
**நீக்கப்படும் சிலைகள், தகர்க்கப்படும் சின்னங்கள்**
பல்வேறு நகரங்களில் போராட்டக்காரர்கள் பழைய தென்மாநில கான்ஃபெடரேட் நினைவுச் சின்னங்கள், அந்த வீரர்களின் சிலைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும் எனக் குரல் கொடுக்கிறார்கள். சிலவற்றை அவர்களே அகற்றுகிறார்கள். வேறு சிலவற்றை நகர அரசுகளே முன்வந்து அகற்றுகின்றன.
நார்த் கரோலினா மாநிலத்தில் அந்தக் காலத்தில் அடிமைகளை வாங்கி விற்கும் சந்தைக் கட்டடம் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. அது மே 30ஆம் தேதி தீ வைக்கப்பட்டது. அதே போல, ரிச்மண்ட் நகரில் கான்ஃபெரஸி பெண்கள் நினைவுச்சின்னமான கட்டடத்துக்கும் தீ வைக்கப்பட்டது. அங்கு இருந்த உள்நாட்டு போர் நினைவுச் சின்னங்கள் பல சேதமடைந்துள்ளன.
டென்னஸி மாநிலத்தின் நாஷ்வில் நகரில், கறுப்பர்களின் சிவில் உரிமைகளை எதிர்த்த கார்மக் என்பவரின் சிலையைப் போராட்டக்காரர்கள் தகர்த்து விட்டனர். ரிச்மண்ட் நகரில் இருந்த கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் சிலையைப் போராட்டக்காரர்கள் தகர்த்து, எரித்து அருகிலுள்ள ஏரியில் தூக்கி எறிந்துவிட்டார்கள். அமெரிக்கப் பூர்வகுடிகள் சார்பாக இதைச் செய்ததாக அறிவித்துள்ளார்கள். மேலும் பல்வேறு நகரங்களில், நகர நிர்வாகமே கான்ஃபடரேட் நினைவுச் சின்னங்களை, சிலைகளை அகற்றுவதாகக் கூறியுள்ளது.
**கடல் கடந்து பரவும் போராட்டம்**
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் படுகொலையை ஒட்டி நிகழும் கிளர்ச்சிகளின் எதிரொலியாக இங்கிலாந்திலும் சிலைகள் அகற்றப்படுகின்றன. அடிமை வியாபாரத்தில் ஈடுபட்ட எட்வர்ட் கால்ஸ்டன், ராபர்ட் மில்லிகன் ஆகியோர் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன.
பெல்ஜியத்தில் ஆப்பிரிக்க நாடான காங்கோவைக் கைப்பற்றி கறுப்பர்களை அடிமைப்படுத்தி பல கொடுமைகள் செய்த இரண்டாம் லியோபால்ட் என்ற அரசரின் சிலை சிதைக்கப்பட்டு, எரியூட்டப்பட்ட பின் முனிசிபாலிடியால் அகற்றப்பட்டுவிட்டது.
இதெற்கெல்லாம் வெகு தொலைவில் நியூசிலாந்தில்கூட அங்கேயிருந்த பூர்வகுடிகளை கொன்ற ஜான் ஹாமில்டன் சிலையை, பூர்வகுடிகளின் அமைப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க நகர நிர்வாகம் அகற்றிவிட்டது.
**வரலாற்று நினைவா? வரலாற்றுக் கறையா?**
நல்லவர்களோ, கெட்டவர்களோ இந்தச் சிலைகளும், நினைவுச் சின்னங்களும் வரலாற்றுத் தடயங்கள்; அவற்றை அகற்றுவது கூடாது என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் அப்படி கூறுபவர்களை நோக்கி போராடும் கறுப்பின மக்கள் அமெரிக்க சுதந்திரப் போரின்போது இங்கிலாந்து அரசர் ஜார்ஜின் சிலையை நீங்கள் நீக்கவில்லையா, அதை உடைத்து குண்டுகள் செய்யவில்லையா என்று கேட்கிறார்கள்.
இந்த சிலைகளும், நினைவுச் சின்னங்களும் கறுப்பர்களின் அடிமை வரலாற்றை நினைவுகொள்வது மட்டுமல்ல, வெள்ளை ஆதிபத்தியத்தை கொண்டாடுபவையாகவும் இருக்கின்றன என்பதே போராட்டக்காரர்களின் கருத்து. அவை கறுப்பின மக்களை எச்சரிக்கை செய்பவையாகவும் இருக்கின்றன என்கிறார்கள். அதனால் அமெரிக்கா முழுவதும் கான்ஃபெடரஸி சிலைகள் நீக்கப்படுகின்றன. அதன் தாக்கத்தில் உலகின் பல நாடுகளிலும் அடிமை வியாபாரிகள், பூர்வகுடிகளைக் கொன்றவர்கள் சிலைகள் அகற்றப்படுகின்றன.
அநியாயமாக காவல்துறையினரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டின் உயிர் வீணாகப் பறிபோகவில்லை. அது உலகெங்கும் நிறவெறியின் வரலாற்றுக்கு எதிரான போர் முழக்கத்தை ஒலிக்கச் செய்திருக்கிறது. பழங்கணக்குகள் தீர்க்கப்படுகின்றன. இந்தச் செயல்களால் அவர் ஆன்மா சாந்தியடையும் என நம்பலாம்.
**கட்டுரையாளர் குறிப்பு**
கட்டுரையாளர் : ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
�,”