சென்னை அணியிலேயே தனக்கு மீண்டும் இடம் கிடைத்திருக்கும் நிலையில் அதைக் கொண்டாடும் விதமாக ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. பல புதிய வீரர்கள் அணிக்கு வருவதும் பல பழைய வீரர்களை நீக்குவதுமாக போட்டியிடும் அணிகள் சில தடாலடியான முடிவுகளையும் எடுத்துவருகின்றன. இதனால் ஐபிஎல்லுக்கு முன்பான வீரர்களின் ஏலமே அனல் பறக்கத் துவங்கியுள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸுக்குத் தாவிய ஹார்பஜன் சிங், இந்த ஆண்டும் சென்னை அணியிலேயே தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அது குறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஹர்பஜன், “தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன். திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன்.சும்மா நெருப்பா,சிறப்பா ஒவ்வொரு மேட்சும். தெறிக்கவிடலாமா! வோர்ல்டு மொத்தமும் அரளவுடனும் பிஸ்து. பிசுறு கெளப்பி பெர்ளவுடனும் பல்து. 2019 ஐபிஎல்லிலும் சென்னை அணியிலேயே நீடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” எனும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அணிக்கு வந்ததிலிருந்து செந்தமிழில் ட்வீட் போட ஆரம்பித்த ஹர்பஜன் சிங்கின் பதிவுகளுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் இந்தப் பதிவும் பெருத்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரஜினி, விஜய், அஜித், சிம்பு என கோலிவுட் நடிகர்களின் பட பாப்புலர் வசனங்களை லாவகமாக இந்தப் பதிவில் கையாண்டிருப்பதால் ஹர்பஜனுக்கு தமிழில் மொழிபெயர்த்துத் தருபவர் தீவிர சினிமா ரசிகராக இருப்பாரோ… எனவும் கூறிவருகின்றனர் நெட்டிசன்ஸ்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி ஐபிஎல் வீரர்களான எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் சென்னை அணியிலேயே தக்கவைக்கப்பட்டுள்ளனர்.�,