மாநில அரசுகள் வழங்கும் விவசாயக் கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு நிதி உதவி செய்வதில்லை என சில நாட்களாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மற்றும் பிரச்னைகள் குறித்து இரண்டாம்கட்ட பொருளாதார ஆய்வு நடைபெறவுள்ளது.
நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் இது தொடர்பாக, “விவசாய கடன் தள்ளுபடியால் மாநில அரசுகளுக்கு மட்டுமல்லாமல், மத்திய அரசுக்கும் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் என்பது பற்றி நாங்கள் தகவல்களையும், கணக்கீடுகளையும் வழங்குவோம்” என அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களில், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தன. மேலும், மத்திய அரசிடம் இருந்து உதவி பெறவும் முயன்றன.
ஆனால், “மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறைக்கு இலக்குகள் உள்ளன. அதற்கேற்ப தீர்மானம் எடுக்கவே நாங்கள் விரும்புகிறோம். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய நினைக்கும் மாநில அரசுகள் அவர்களாகவே அவற்றை தள்ளுபடி செய்துவிட வேண்டும். இதில் மத்திய அரசு செய்ய ஒன்றுமில்லை” என அவர் கூறினார்.
2008ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, 52,000 கோடி ரூபாய்க்கு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது. இதனால் நிதி பற்றாக்குறையில் தாக்கம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு இரண்டே வழிகள் தான் உள்ளன. ஒன்று மற்ற பகுதிகளில் அரசு செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும், அல்லது நிதி சார்ந்த இலக்குகளில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.�,