தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 16) நேரில் சந்தித்துப் பேசினார்.
மக்களவைத் தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற அதிமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தின்போதே, எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை அறிவிக்கப்படவில்லை. தொகுதிகளை பங்கிடுவது தொடர்பாக தேமுதிகவுக்கும் பாமகவுக்கும் இழுபறி நீடித்துவருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பியுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை, ராமதாஸ், வாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்து நலம் விசாரித்தனர்.
அந்த வகையில் சென்னை சாலிகிராமத்திலுள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு இன்று காலை 11.30 மணி வாக்கில் வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரேமலதா வரவேற்றார். முதல்வருடன் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்களும் இருந்தனர். விஜயகாந்துக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து முதல்வர் நலம் விசாரித்தார். பதிலுக்கு விஜயகாந்தும் முதல்வருக்கு பொன்னாடை அணிவித்தார்.
இருவரும் தேர்தல் விவகாரங்கள் தொடர்பாக சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.விஜயகாந்த் இல்லத்துக்கு முதல்வர் நேரடியாக வந்து நலம் விசாரித்துள்ளது தேமுதிக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் இருவரும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
�,”