முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக வலியுறுத்துவோம் என சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணைத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். இதுவரை சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற அப்போலோ மருத்துவமனை அறையிலும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சசிகலா தரப்பு வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியன் நேற்று (ஆகஸ்ட் 21) செய்தியாளர்களிடம் பேசுகையில், “துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தனக்கு எதுவும் தெரியாது. ஆகையால் விசாரணைக்காக ஆஜராக வேண்டியதில்லை என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஆணையம் உருவாக மூலக் காரணம் குருமூர்த்தி என்பதால் அவர் விசாரிக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தேன். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராக குருமூர்த்திக்கு விலக்கு அளிக்கப்பட்டால் ஆஜராக உத்தரவிடப்படும் அனைவரும் அந்த நிலையை எடுக்கும் சூழல் ஏற்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவர்களிடம் வியாழக்கிழமை ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது. வெள்ளிக்கிழமை நாங்கள் குறுக்கு விசாரணை மேற்கொள்ள உள்ளோம். எய்ம்ஸ் மருத்துவர்களை விசாரணை செய்வதன் மூலம் ஜெயலலிதா மரணம் தொடர்பான பல முக்கிய தகவல்கள் தெரியவரும்
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக ஆணையத்திடம் வலியுறுத்தப்படும். ஆணையம் எதற்காக அமைக்கப்பட்டது என அவர்களால் காக்கப்பட்டு வந்த ரகசியம் விரைவில் வெளிவரும்” என்று தெரிவித்தார்.�,