புல்வாமா படுகொலையையொட்டி பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும், கொலைக்குப் பழிவாங்க வேண்டுமெனவும் பலர் கூறிவரும் நிலையில் அதுகுறித்த தனது கருத்தை கமல்ஹாசன் வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் ரோட்ராக்ட் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று (பிப்ரவரி 17) கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார். அப்போது புலுவாமா படுகொலைக்காக பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும், கொலைக்குப் பழிவாங்க வேண்டுமென்று பலர் கூறி வருவது குறித்து தனது கருத்தை கமல்ஹாசன் வெளிப்படுத்தினார். “ரத்தம் வருகிறது என்றால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டியதுதான் முதல் வேலை. ஆனால் சர்ஜரியைப் பற்று பேசுகிறார்கள். சர்ஜரியும் தேவை. ரத்தத்தை நிறுத்த வேண்டியதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும்” என்றார்.
44 பேர் இறந்ததற்காக யாருடைய பெற்றோராவது இராணுவத்தில் சேரக்கூடாது என்று சொன்னால், தமிழ்நாட்டில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களை விட இராணுவத்தில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை குறைவுதான் என்றுதான் அவர்களிடம் சொல்லுங்கள் என்றும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் கூறினார்.
மேலும், “இராணுவத்திற்குச் சாகத்தான் செல்கிறார்கள் என்பதை நான் நம்பவில்லை. உலகம் மாற வேண்டும். ஒருவரை ஒருவர் அடித்துச் சாப்பிடுவதை வேண்டாம் என்று இந்த உலகம் முடிவெடுத்ததைப் போல, ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்வதும் வேண்டாமென்று நிறுத்த வேண்டிய நாள் ஒருநாள் வரும். நம் வீட்டுக் காவலாளி ஏன் சாக வேண்டும்? இருதரப்பு அரசியல்வாதிகளும் ஒழுங்காக நடந்துகொண்டால் யாரும் சாக வேண்டிய தேவையே இருக்காது” என்றும் கமல்ஹாசன் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் 40 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுவதாக மக்கள் நீதிமய்யம் கூறியுள்ளது குறித்தும் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் கேள்வியெழுப்பினர். ”குடியரசு கோவிலுக்குள் நான் காலெடுத்து வைக்கப்போகிறேன். அழுக்குக் குட்டையில் வைத்த காலை அங்கு வைக்க விரும்பவில்லை. அதனால் தனியாகப் போகிறேன். டெல்லி தனி, தமிழ்நாடு தனி அல்ல. டெல்லி இல்லாமல் தமிழ்நாடு வாழ்க்கை நடத்தும் என்று நினைக்கக்கூடாது. அதேபோல தமிழ்நாடு இல்லாமல் நாங்கள் நடத்துவோம் என்று டெல்லியும் நினைக்கக்கூடாது. அதனால் 40 தொகுதியிலும் நாங்கள் போட்டியிடுகிறோம்.
டெல்லியில் யார் வந்தாலும் தமிழ்நாட்டைப் பாதிக்கும். நான் அங்கே போவதே தமிழ்நாட்டுக்காகத்தான். அங்குப் போய்தான் ஆக வேண்டும். முதலில் தமிழ்நாடு, அதற்குப்பிறகுதான் தேசம். இது தேசத்தின் ஒருபகுதி” என்றும் கமல்ஹாசன் கூறினார். வழக்கமாக திமுக, அதிமுகவை விமர்சிக்கும் கமல் இன்றைக்கு ரஜினிகாந்தையும் விமர்சித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று இன்று காலையில் ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அதை விமர்சிக்கும் விதமாக, “கட்சி ஆரம்பித்துவிட்டு இன்றைக்கு இல்லை, நாளைக்கு வருகிறேன் என்றால் என்னை யாரும் மதிக்க மாட்டார்கள். தொடையை தட்டிக்கொண்டு ஏன் வந்தீர்கள் என்றால் வெறும் சத்தத்துக்குத்தான் தட்டினேன் என்றா சொல்ல முடியும்?” என்றார். கிராம சபைக் கூட்டங்களை தன்னைப் பார்த்து திமுக காப்பியடிப்பதாகவும் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார். இதனிடையே புதுவையில் நாராயணசாமிக்கு நேரில் ஆதரவு தெரிவிக்க சென்ற ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு தான் அரசியல் பேசுவதாக ஸ்டாலின் கூறினார். இதற்கு நாரயாணசாமி உள்ளிட்ட அருகிலிருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.�,