rலேப்-டாப் கேட்ட மாணவரைத் தாக்கிய ஆசிரியர்!

Published On:

| By Balaji

கடலூர் மஞ்சக்குப்பத்தில் செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரே வளாகத்தில் எல்கேஜி முதல் கல்லூரி வகுப்புகள் வரை நடைபெற்று வருகின்றன. செயின்ட் ஜோசப் பள்ளியில் ப்ளஸ் 2 வகுப்பு முடித்துவிட்டு, அங்கிருக்கும் கல்லூரியிலேயே பி.ஏ வரலாறு முதலாமாண்டு சேர்ந்துள்ள தினேஷ் ராஜகுமார் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி முதல்வர் அருள்நாதனை நேற்று (அக்டோபர் 3) காலை 11 மணிக்குச் சந்தித்துள்ளனர். அப்போது, தங்களுக்கு வழங்க வேண்டிய இலவச மடிக்கணினி தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக அலுவலகத்தில் சென்று கேட்கச் சொல்லியிருக்கிறார் பள்ளி முதல்வர்.

இதையடுத்து, அலுவலகத்தை நோக்கிச் சென்ற மாணவன் தினேஷை வழிமறித்த உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன், “பள்ளிக்கூடமா, என்னண்ணா கேக்குற, இப்ப பேசுடா” என்று சரமாரியாகக் கன்னத்தில் மாறி மாறி அறைந்தபடி, சட்டையைப் பிடித்து தரத்தரவென உள்ளே இழுத்து வருகிறார். அங்கு வைத்தும் சரமாரியாகத் தாக்குகிறார். இது சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையிலேயே நிகழ்கிறது.

ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த மாணவர், கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஆசிரியருக்கு எதிராக புகார் அளித்தார். இதையடுத்து, கடலூர் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடம் பேசினோம், “நானும் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன்தான். அரசு பள்ளியில் பிடி மாஸ்டராக இருந்துதான் காவல் துறை பணிக்கு வந்தேன். இதுபோல் மாணவர்களிடம் நான் நடந்தது கொண்டது இல்லை. ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த மாணவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் ஆசிரியரைக் கைது செய்துள்ளோம்” என்றார்.

தாக்கப்பட்ட மாணவர் தினேஷ் ராஜகுமாரிடம் கேட்டபோது, “சந்திரமோகன் பி.டி மாஸ்டரை ரவுடி மாஸ்டர் என்றுதான் அழைப்பார்கள். இவருக்கு ஆசிரியர்களே பயப்படுவார்கள். நாங்கள் எங்களுக்குக் கிடைக்கவேண்டிய இலவச லேப்-டாப்பைத்தான் கேட்டோம். அதற்காக நாயை அடிப்பதுபோல் அடிக்கிறார்” என்றார்.

மாணவர்களுக்கு அமைதியையும் ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டிய ஆசிரியரே, அவர்கள் மீது வன்முறையை ஏவுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழத்தான் செய்கிறது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share