rலஞ்சப் புகார்: காவலர்கள் சீருடையில் கேமரா!

Published On:

| By Balaji

போக்குவரத்துக் காவல் அதிகாரிகள் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம், சென்னையில் இன்னும் ஒரு மாதத்தில்செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது,

போக்குவரத்துக் காவல் துறையினர் மீது கூறப்படும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை காவல் துறை அதிகாரிகள் புதிய முயற்சி எடுத்துள்ளனர். இதன்படி, போக்குவரத்துக் காவல் அதிகாரிகள் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் அடுத்த மாதத்தில் இருந்து செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

**சிறப்பம்சங்கள்**

இந்த திட்டமானது 1.50 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக 200 கேமராக்கள் வாங்கப்படுகின்றன. பின்னர் 100 கேமராக்கள் வாங்கப்படவுள்ளன. இது தொடர்ந்து 8 மணி நேரம் செயல்படக்கூடியதாக இருக்கும். 34 ஜிபி அளவுக்கு, இதில் தகவல்களைச் சேமிக்க முடியும். 120 டிகிரி கோணத்துக்கு காட்சிகளைப் பதிவு செய்யலாம். 1080 பிக்சல் துல்லியமாகக் காட்சிகள் பதிவாகும். என்கோடிங் பார்மேட் என்ற தொழில்நுட்பத்தில் காட்சிகள் கேமராவில் சேமிக்கப்படும்.

ஒவ்வொரு போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்திலும் மினி சர்வர் அமைக்கப்படும். இந்த சர்வர் சென்னை வேப்பேரியில் உள்ள போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் இருக்கும் பிரதான சர்வரில் இணைக்கப்படவுள்ளது.

**புகார்களுக்கு முற்றுபுள்ளி**

ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதம் முதல் இத்திட்டம் சோதனை முறையில் செய்து பார்க்கப்பட்டது. அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் தற்போது சரி செய்துள்ளது. இதனால் லஞ்சப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், போலீசாரிடம் தகராறு செய்பவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும், காவலர் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை காவல் துறை முடிவு செய்தது. இந்த திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்துள்ளது.

இத்திட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வரும் என சென்னை பெருநகரக் காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

**பணிநீக்கம்**

கேமரா வழங்கிய பின்பு, பணியில் இருக்கும் போது கேமராவை ஆஃப் செய்தால் சம்பந்தப்பட்ட காவல் துறைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் இருந்து காவல் பணிக்குச் செல்லும் போது, இந்த கேமரா ஆன் செய்யப்படும்; பணி முடிந்த பிறகே ஆஃப் செய்ய வேண்டும்.

இடைப்பட்ட நேரத்தில் கேமராவை ஆஃப் செய்தால், லஞ்சம் வாங்குவதற்காக கேமராவை ஆஃப் செய்திருக்கலாம் என்று கூறி, சம்பந்தப்பட்டவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார். கேமராவில் லஞ்சம் வாங்குவது பதிவாகினால், சம்பந்தப்பட்ட காவலர் எந்த ஒரு விசாரணையும் இன்றி பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share