ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க குடும்ப அட்டை உறுப்பினர்களின் கைரேகைகளைப் பதிவு செய்வதற்கான கருவிகளைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்.
ரேஷன் பொருட்களைக் கள்ளத்தனமாக விற்பனை செய்ததாகப் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ரேஷன் கடை விற்பனையாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், ரேஷன் பொருட்கள் திருட்டைத் தடுக்கக் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்துப் பதிலளிக்குமாறு கூட்டுறவு சங்கப் பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, நேற்று (பிப்ரவரி 16) கூட்டுறவு சங்கப் பதிவாளர் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், கூட்டுறவு விற்பனை அங்காடி கடைகள், 1,500 அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகள் என 416 கடைகளில் 6 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு, அனைத்துப் பரிவர்த்தனைகளும் அட்டைதாரர்களுக்கு மொபைலில் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து ரேஷன் கடைகளுக்குப் பொருட்களைக் கொண்டு செல்லும் லாரிகளைக் கண்காணிக்க ஜிபிஎஸ் பொருத்துவது குறித்தும் அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ரேஷன் பொருட்கள் வேறு நபர்களுக்கு விற்கப்படுவதைத் தடுக்க, குடும்ப அட்டை உறுப்பினர்களின் விரல் ரேகையைப் பதிவு செய்யும் கருவிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும், அந்தக் கருவிகளை நிறுவிய பின்னர் குடும்ப அட்டை உறுப்பினர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதி கிருஷ்ணகுமார், வழக்கின் விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.�,