ஜம்மு காஷ்மீரில் அனில் அம்பானியின் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தம் ரத்து செய்யப்படவுள்ளதாக அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தற்போது ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் ஆகியோருக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்தது. இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் அரசு ஊழியர்களுக்குக் கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கான [ஒப்பந்தம்](https://www.minnambalam.com/k/2018/10/08/41) அனில் அம்பானியின் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதற்கே அப்போதே எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் இதனை விமர்சித்திருந்தனர். எனினும் நியாயமான முறையிலேயே ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் விளக்கமளித்தது.
இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை மோசடி குற்றச்சாட்டு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஆளுநர் சத்திய பால் மாலிக், ஜி நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“அரசாங்கம் யாருக்கும் ஒப்பந்தம் வழங்கவில்லை. ஒரு தனியார் நிறுவனம் மற்றொரு தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்தங்களை கோரியது. அந்த ஏலங்களின் அரசாங்கத்தின் இணையதளத்தில் எங்கும் காட்டப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பொருந்துமாறு ஒப்பந்தங்கள் மாற்றப்பட்டுள்ளன. இது முழுவதும் மோசடிகளால் நிறைந்தது. நான் தலைமை செயலாளருடன் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசித்தேன். நான் இருக்கும்போது இதுபோன்ற விஷயங்கள் நடக்கக்கூடாது என்பதை தெளிவுப்படுத்தினேன். எனவே, அதை ரத்து செய்ய முடிவு செய்தோம்” என்று கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்வது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.�,