ரஃபேல் வழக்கு விசாரணையின்போது நீதிபதி ஜோசப் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்குப் பதிலளிக்க அட்டர்னி ஜெனரல் தடுமாறியபோது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அவருக்கு உதவினார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருந்தபோது, அவருக்கு எதிராக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 4 நீதிபதிகளில் ஒருவர் ரஞ்சன் கோகோய். தீபக் மிஸ்ரா ஓய்வுபெற்றதும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவியேற்றார். தற்போதைய மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என ரஞ்சன் கோகோய் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டுவரும் நிலையில், தான் அனைத்துத் தரப்புக்கும் பொதுவானவர் என்பதை நேற்றைய ரஃபேல் வழக்கு விசாரணையில் ரஞ்சன் கோகோய் நிரூபித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றபோது, “126 ரஃபேல் விமானங்களை பெறுவதற்கான முன்மொழிவு ஜூன் 2015இல் திரும்ப பெறப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. அப்படியென்றால், ஏப்ரல் 2015ல் 36 ரஃபேல் விமானங்களை பெறுவதற்கான புதிய ஒப்பந்தத்தை பிரதமர் மோடி அறிவிக்கும்போது பழைய ஒப்பந்தம் நிலுவையில் இருந்ததுதானே? பழைய ஒப்பந்தத்தை திரும்ப பெறாமல் எப்படி பிரதமர் புதிய ஒப்பந்தத்தை அறிவித்தார்” என நீதிபதி கே.என்.ஜோசப் அரசிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளிக்க முடியாமல் தடுமாறிய அட்டர்ஜி ஜெனரல் வேணுகோபால், வழக்கறிஞர் ஆர்.பாலசுப்ரமணியன் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரின் உதவியை நாடினார். அப்போது, “உங்களுடைய குறிப்பிலேயே இதற்கான பதில் உள்ளது. அதில், 18ஆம் பத்தியில் முந்தைய ஒப்பந்தத்தை திரும்ப பெறுவதற்கான பணிகள் மார்ச் 18ஆம் தேதியே தொடங்கிவிட்டது என கூறப்பட்டுள்ளது” என வேணுகோபாலிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.
இதேபோல், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்திற்கு உதவும் வகையில் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகள் தன்னிச்சையாக மாற்றப்பட்டுள்ளதாக பிரசாந்த் பூஷண் மற்றும் அருண் சோரி ஆகியோர் வாதிட்டனர். அதன்பின்னர், நீதிபதி ஜோசப், “இந்திய ஆஃப்செட் கூட்டாளி(ஐ.ஓ.பி) எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறித்து நீங்கள் விளக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சரின் ஒப்புதலுடன் மட்டுமே ஐ.ஓ.பி. சேர்க்கப்பட முடியும் என்றும் செயல்முறை கூறுகிறது. இது முக்கிய ஒப்பந்தத்தில் இணைக்கப்பட வேண்டும்” என்று ஏ.ஜி. யிடம் கூறினார்.
திருத்தம் மூலமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளர் அபூர்வா சந்திரா விளக்கமளித்தார்.
அப்போது ரஞ்சன் கோகோய், “ஐ.ஓ.பி. தொடர்புடைய பாதுகாப்பு கொள்முதல் நடைமுறையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது, பாதுகாப்புத் துறை அமைச்சரின் ஒப்புதல் தேவைப்படும் இதர திருத்தப்படாத பிரிவுகளையும் உள்ளடக்கும் என்பதுதானே உங்கள் வாதத்தின் சாரம்” என்று மீண்டும் ஏ.ஜி.க்கு உதவினார்.
126 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு புதிதாக 36 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு நுழைந்துள்ளது. இதற்கு புதிய முன்மொழிவுக்கான கோரிக்கை (ஆர்.எஃப்.பி) தேவை இல்லையா” என்று ஜோசப் மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதற்கும் பதில் கூற முடியாமல் வேணுகோபால் இருந்தபோது, “அரசாங்க சார்பு ஒப்பந்தங்களுக்கு ஆர்.எஃப்.பி. தேவையில்லை என்பது உங்களின் நிலைப்பாடு” என்று ரஞ்சன் கோகோய் அவரிடம் கூறினார்.�,