�
பிஎம் நரேந்திரமோடி படத்துக்கு தடைகோரிய பொதுநல வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்தியத் திரையுலகில் தொடர்ந்து பயோ பிக் திரைப்படங்கள் வெளியாகிவருகின்றன. அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாகியுள்ளது. பயோ பிக் உருவாவது பிரச்சினையில்லை, ஏன் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் பட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு சரியாக தேர்தல் சமயத்தில் வெளியாகிறது என்று கேள்விகள் எழுந்தன. திரைப்படம் போன்ற வலிமையான காட்சி ஊடகம் மூலம் கூறும் கருத்துகள் உடனடியாக பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இப்படத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
இந்தப் படம் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பி.எம். நரேந்திர மோடி படத்தை திரையிடக் கூடாது என மும்பை, டெல்லி மற்றும் அலகாபாத் உயர்நீதி மன்றங்களில் சிலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
இதேபோல், தலைமை தேர்தல் ஆணையரிடமும் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில், பி.எம். நரேந்திர மோடி படத்துக்கு தடை கோரிய பொதுநல வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
மோடி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ள இந்தப் படத்தை ஓமங் குமார் இயக்கியுள்ளார். தமிழ் உள்பட 23 மொழிகளில் இப்படம் தயாராகியுள்ளது.�,