ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக்குகளுக்கு இந்தியாவில் 50 சதவிகிதம் இறக்குமதி வரி விதிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இதனால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையுமில்லை என்று கூறினார். இதைக் குறிப்பிடும்போது, அவர் பிரதமர் நரேந்திர மோடியைப் போன்று மிமிக்ரி செய்தார்.
கடந்த ஜூன் மாதம் முதன்முறையாக அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை நேரில் சந்தித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. இந்தச் சந்திப்பை சர்வதேச ஊடகங்கள் மாபெரும் கொண்டாட்டமாக வர்ணித்தன. அதற்கு முன்னதாக, ட்ரம்ப் பதவியேற்பு விழாவின்போதே அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார் மோடி.
அதன்பிறகு, கடந்த நவம்பர் மாதம் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டபோதும் மோடியைப் பாராட்டினார். இதனால், இருவருக்குமான நெருக்கம் சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா முன்னேறியிருப்பதாகவும், அந்நாட்டையும் நாட்டு மக்களையும் ஒருங்கிணைப்பதில் மோடி வெற்றி பெற்றிருப்பதாகவும் தன் பேச்சில் குறிப்பிட்டிருந்தார் ட்ரம்ப்.
இருவரும் மாறிமாறி புகழ்ந்து கொண்டிருந்த நேரத்தில், கடந்த ஜனவரி மாதம் மோடியின் ஆங்கில உச்சரிப்பை ட்ரம்ப் மிமிக்ரி செய்ததாகத் தகவல் வெளியானது. இது மோடி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (பிப்ரவரி 26) அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் மாகாண கவர்னர்கள் மத்தியில் பேசினார் டொனால்டு ட்ரம்ப். அந்தக் கூட்டத்தில், மற்ற நாடுகளுடனான அமெரிக்காவின் வணிக உறவு பற்றி விமர்சித்தார். அப்போது, இரண்டாவது முறையாக மோடியை மிமிக்ரி செய்தார்.
“ஹார்லி டேவிட்சன் தனது மோட்டார் பைக்கை இந்தியாவுக்கு அனுப்புவதாக வைத்துக்கொள்வோம். அதற்கு, அவர்கள் 100 சதவிகித இறக்குமதி வரி விதிப்பதே வழக்கம். சமீபத்தில் ஒருநாள் இந்தியப் பிரதமர் மோடி எனக்கு போன் செய்து பேசினார். அவர் மிக அழகான மனிதர். அப்போது, அவர் அழகாகப் பேசினார். ஹார்லி டேவிட்சன் மீதான இறக்குமதி வரியை 75 சதவிகிதமாகக் குறைத்து, அதன்பின் தற்போது 50 சதவிகிதமாகக் குறைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதனால், இதுவரை நமக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவருக்கோ 50 சதவிகிதம் கிடைக்கிறது. ஆனால், நமக்கு சகாயம் செய்வதாக, அவர்கள் சொல்கிறார்கள்” என்று கூறினார். மேலும், இந்தியாவிலிருந்து பெருமளவில் அமெரிக்காவுக்கு இருசக்கர வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அவற்றுக்கு அமெரிக்காவில் எந்தவித வரியும் விதிக்கப்படவில்லை எனவும், அதனால் நாட்டுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை எனவும் குறிப்பிட்டார் ட்ரம்ப். இதனைச் சொல்லும்போது, பிரதமர் மோடியைப் போன்று மிமிக்ரி செய்தார் ட்ரம்ப்.
சில நாள்களுக்கு முன்பு, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசியபோதும் இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக் இறக்குமதி செய்வது பற்றி ட்ரம்ப் பேசியது குறிப்பிடத்தக்கது.
�,