எதிரும் புதிருமாக இருந்துவந்த பாமகவும் தேமுதிகவும் மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மார்ச் 14) சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை சாலிகிராமத்திலுள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு இன்று காலை 11 மணி வாக்கில் ராமதாஸ் காரில் வந்தார். அவருடன் அன்புமணி ராமதாஸ், பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோரும் அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணியும் வந்தனர். அவர்களை பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர் வரவேற்று வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். விஜயகாந்த்தை சந்தித்து பூங்கொத்து கொடுத்து உடல்நலம் விசாரித்த ராமதாஸ், சிறிது நேரம் அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “விஜயகாந்தின் உடல்நலம் விசாரிக்கவே வந்தேன். சந்திப்பு நல்லபடியாக முடிந்தது. நாங்கள் நல்லபடியாக பேசினோம். தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.
அதிமுக-தேமுதிக கூட்டணி அமைந்துவிட்ட இந்த நிலையில் விஜயகாந்தை ராமதாஸ் சந்தித்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முதல்முறையாக ராமதாஸ்- விஜயகாந்த் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதன்மூலம் இரு தரப்பினர் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடு மறைந்து, தேர்தலில் இரு கட்சியினரும் இணைந்து பணியாற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிக வருகையால் வடமாவட்டங்களில் தங்களது செல்வாக்கு குறைந்து விட்டதாக பாமக கருதியது. இதனால் ஆரம்பத்திலிருந்தே தேமுதிகவும், பாமகவும் எதிரும் புதிருமாகவே செயல்பட்டுவந்தன. 2014ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக, தேமுதிக ஆகியவை இடம்பெற்றிருந்த போதும் கூட அன்புமணி ராமதாஸும், விஜயகாந்தும் மட்டுமே சந்தித்துக்கொண்டனர்.
வரும் மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக பாமக இணைந்தது. 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் பாமகவுடன் ஏன் முதலில் கூட்டணி அமைத்தீர்கள், அனைத்துக் கட்சிகளையும் ஒன்றாக அழைத்து கூட்டணியை இறுதி செய்திருக்கலாமே என்று தனது அதிருப்தியை தெரிவித்தது தேமுதிக. இதுகுறித்த ஊடகங்களில் சுதீஷ் வெளிப்படையாகவே கூறினார். மேலும் பாமகவுக்கு நிகரான இடங்கள் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிமுகவிடம் அழுத்தம் கொடுத்துவந்ததாகவும் கூறப்பட்டது.
இது ஒருபுறமிருக்க தேமுதிக கூட்டணிக்கு வந்தால் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளிலும் பாமகவினரும், பாமக போட்டியிடும் தொகுதிகளில் தேமுதிகவினரும் சரிவர பணியாற்றுவார்களா என்பது சந்தேகமே. எனவே கூட்டணியில் தேமுதிக வேண்டாம் என்று எடப்பாடிக்கு ராமதாஸ் அழுத்தம் கொடுத்துவந்ததாகவும் தகவல் வெளியானது.
இப்படி இரு கட்சிகளின் கருத்து வேறுபாடு நீண்டு வந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடியவும் இரு கட்சியின் தொண்டர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
�,