rமீனவர்களுக்கு தனி அமைச்சகம்: ராகுல் உறுதி!

Published On:

| By Balaji

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரிலுள்ள திருப்ரையாரில் அனைந்திந்திய மீனவர் சங்கம் தேசிய மீனவர் பார்லிமெண்ட் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இன்று (மார்ச் 14) நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது, “2019 மக்களவைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றவுடனேயே நாட்டிலுள்ள அனைத்து மீனவர்களுக்காகவும் டெல்லியில் ஒரு தனி அமைச்சகம் உருவாக்கப்படும். நான் நரேந்திர மோடியைப் போல அல்ல. நான் போலியான வாக்குறுதிகளை அளிப்பதில்லை. என்னுடைய உரைகளை கவனமாக கவனியுங்கள். நான் ஒரு செயலை செய்யவேண்டும் என தீர்மானித்துவிட்டதாலேயே அதை வாக்குறுதியாக அளிக்கிறேன். தற்போது இருக்கும் ஜிஎஸ்டி உண்மையான ஜிஎஸ்டி அல்ல. அது கப்பர் சிங் வரி. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தி வரி விகிதங்களை குறைப்போம்.

நாட்டிலுள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அனைத்தும் பணக்காரர்களுக்கு மட்டும் எளிதாக சேவை புரிகின்றன. நாட்டிலுள்ள சில பணக்காரர்கள் மட்டும் பெற்ற ரூ.3.5 லட்சம் கோடி கடன் தொகையை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யப்போகிறோம் என்று நாங்கள் கூறினால் என் மீது குற்றம் சுமத்துகின்றனர். சில பணக்காரர்களின் கடன் தொகை மட்டும் தள்ளுபடியாவது குறித்து அவர்கள் ஏன் பேசுவதில்லை? ஏழை மீனவர்களின் குரல் டெல்லியில் ஒலிப்பதை உறுதி செய்வதில் காங்கிரஸ் கவனமாக உள்ளது” என்று தெரிவித்தார். மேலும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சூரில் நடைபெற்ற உலகின் முதல் மீனவர் பார்லிமெண்ட் கூட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும், 543 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்தியா முழுவதும் உள்ள மீனவ சமுதாயங்களை வலுப்படுத்துவது பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share