மணிரத்னத்தின் திரைமொழியை விவாதிக்கும் தொடர் – 2
**அர்ஜுனின் establishment ஷாட்கள்**
அர்ஜுன் (அரவிந்த் சாமி) மாவட்ட ஆட்சியாளர். மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்குத் தினம் தினம் தீர்வு காணும் ஒருவர் – மக்களோடு நெருங்கிப் பணி செய்ய வேண்டியவர். அவரை இன்னும் ஹீரோயிக்காக நிறுவியிருக்கலாமே மணிரத்னம், ஏன் இப்படி போர்வெல் போட்டு தண்ணீர் வரவழைக்கும் ஒரு அற்ப விஷயத்தைச் சாதிப்பவராய் காட்டுகிறார் என நான் இளவயதில் இந்தப் படத்தைப் பார்த்தபோது யோசித்திருக்கிறேன் (தண்ணீரைக் கொண்டுவருவது ஒரு சாதாரண விஷயம் என்றில்லை – ஒரு பேரழிவின்போது மக்களைக் காப்பாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு சந்தர்ப்பம் அல்ல இது என்கிற அளவில் சொல்கிறேன்). ஆனால், சமீபத்தில் இக்காட்சியைக் கண்டபோது எவ்வளவு கவித்துவமான நுண்ணிய காட்சி அமைப்பு இது என விளங்கியது. அர்ஜுன் என்ன மாதிரியான மனிதன் என சுலபத்தில் இந்தக் காட்சிகள் நிறுவுகின்றன – அதாவது உருவக ரீதியாய்.
ஒரு மலைப்பாங்கான இடத்திலிருந்து அர்ஜுன், தண்ணீர் இருக்கும் இடத்தைக் கணிக்கும் நிபுணர், பொதுமக்கள் ஆகியோர் இறங்கி ஒரு சமநிலத்துக்கு வருகிறார்கள். இதற்கு ஒரு low angle ஷாட். பொதுவாக இத்தகைய ஷாட்கள் பாத்திரங்களை கம்பீரமாய் காட்ட உதவும். அகிரா குரசாவோ தன் செவன் சாமுராய் படத்தில் இந்த பாணி காட்சியமைப்பைப் பயன்படுத்திய விதம் பிரசித்தமானது. அந்த உத்தியிலே அர்ஜுனைக் கம்பீரமாய் வலுவான ஓர் ஆளாய் மணிரத்னம் இக்காட்சி வழியே அறிமுகப்படுத்துகிறார்.
அடுத்து அர்ஜுனின் ஆளுமை. அர்ஜுனும் அந்த போர் போடும் எந்திரமும் ஒன்றுதான். அவன் அந்த எந்திரத்தைப் போன்றே துல்லியமாய் கச்சிதமாய் செயல்படுவான். தன் முடிவுகளில் உணர்ச்சிகள் தலையிட அனுமதிக்க மாட்டான். அர்ஜுனை வலது பக்கம் வைத்து எந்திரத்தை இடப்பக்கமாய் வைத்துச் சட்டகமாக்கும் ஷாட் இதை அபாரமாய்ச் சித்திரிக்கிறது. அர்ஜுன் அரசு இயந்திரத்தின் ஒரு செயல்திறன் மிக்க உறுப்பு. அவனது இந்த இயந்திரத்தனம் அவனை வெற்றிகரமான மனிதனாக்குகிறது; மக்கள் அவனைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இந்த குணமே அவனை வாழ்வை அதன் சிக்கல்களுடன் கவனிக்க அனுமதிக்காமல் இருக்கிறது. அவனால் சூர்யா எனும் போதாமைகளால் ஆன மனிதனை புரிந்துகொள்ள முடிவதில்லை. இது வெறுப்பாய் உருவெடுக்கிறது; அவனது வெறுப்பு அழிவுக்கு வித்திடுகிறது. எளிய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தேவராஜையும் அவனது அடியாட்களையும் அவன் அழிக்கிறான். தேவராஜின் மனைவியின் கரு கலைய மறைமுக காரணமாகிறான். மேலும் அவனது இயந்திரத்தனமான ஆவேசம் மறைமுகமாய் மற்றொரு டானான கலிவர்தனுக்கு தேவராஜைப் பழிவாங்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. இப்படி அர்ஜுனின் இந்த அடிப்படையான இயல்பு நன்மையாகவும் தீமையாகவும் பல ஜாலங்கள் காட்டத்தக்கது. இந்தச் சிக்கல்களின் விதை இந்த establishment ஷாட்களில் தெளிவாகிறது.
**Blocking நுணுக்கம்: திரும்பி நிற்பதும் நேராய் கண்ணுக்குக் கண் நோக்குவதும்**
Blocking என்றால் ஒரு திரைச்சட்டகத்தில் எந்த பாத்திரம் எங்கு எப்போது எப்படி நிற்க வேண்டும், வசனம் பேசப்படும்போது எப்படி எங்கு நோக்கி நகர வேண்டும் எனத் தீர்மானிப்பது. இது படப்பிடிப்பில் ஒரு காட்சி ஆற்றலுடன் உருவாகவும் ஒரு குறிப்பிட்ட காட்சியில் பாத்திரங்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்தவும் வெகுவாய் உதவக்கூடியது. நாடகப் பார்வையாளர்களுக்கு இது பழக்கமான ஒன்று – ஓர் உணர்ச்சிகரமான, ஆவேசமான வசனத்தைப் பேசும்போது நடிகர் மேடையின் முன்னால் பார்வையாளர்களுக்கு அருகாமையில், கிட்டத்தட்ட அவர்களை நோக்கிப் பேசுவது போல நகர்ந்து கொள்வார். அப்போது அவரே முன்னிலை பெறுகிறார், பார்வையாளர்களின் கவனம் முழுக்க அவர் மீதே இருக்கும். சினிமாவில் இந்த உத்தி ஒளிப்பதிவின் பல நுணுக்கங்கள், பின்னணி இசை ஆகியவற்றுடன் சேர்த்து மேலும் ஆற்றல் வாய்ந்ததாய் இன்று மாறி உள்ளது. ஒரு தட்டையான காட்சிக்கும் ஒரு dynamicஆன காட்சிக்குமான வித்தியாசம் அதில் பிளாக்கிங் எந்தளவு கலாபூர்வமாய் செயல்பட்டுள்ளது என்பதைப் பொறுத்ததே. தமிழில் மணிரத்னம், சுரேஷ் கிருஷ்ணா போன்றோர் பிளாக்கிங்கைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
தளபதியில் இது எவ்வளவு நுட்பமாய் அமைந்துள்ளது என்பதை அடுத்த திங்கட்கிழமை பார்க்கலாம்.
[பகுதி 1](https://minnambalam.com/k/2019/02/11/6)
�,”