தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக அவரது தாய் உட்பட குடும்பத்தினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சுற்றியுள்ள பகுதிகள் தேனி மக்களவைத் தொகுதியில் இணைகிறது. தேனி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் மகன் ரவீந்திரநாத் தேர்வு செய்யப்பட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
அதிமுகவை எதிர்த்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சியின் செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
தேனியில் வலுமையான மும்முனை போட்டி நிலவுவதால், அங்குத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. ஒரு பக்கம் துணை முதல்வர் அதிமுகவுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்கு சேகரித்து வரும் நிலையில், இன்று மகன் ரவீந்திரநாத் போட்டிடும் தேனி தொகுதியில் அவரது குடும்ப பெண்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி உட்பட குடும்ப பெண்கள் கட்சித் துண்டை கழுத்தில் போட்டு கொண்டு, கட்சிக்காரர்களுடன் கம்பம், போடி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு ரவீந்திரநாத்துக்கு வாக்கு சேகரித்திருக்கின்றனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக ஓபிஎஸ் போட்டியிடும் போது பிரச்சாரத்திற்காக வீட்டை விட்டு வெளியே வராத அவரது மனைவி தற்போது மகனுக்காக வாக்கு சேகரிக்கக் களத்தில் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.�,